Thug Life: வேகமெடுக்கும் தக் லைஃப்... நான் ஸ்டாப் மோடில் மணிரத்னம்... அடுத்த லொகேஷன் இதுதான்!
சென்னை: நாயகன் படத்துக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி தக் லைஃப் என்ற டைட்டிலுடன் சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. ஆனால் அதே வேகத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக மணிரத்னம் சூப்பரான லொகேஷனை தேடிப் பிடித்துள்ளார்.
தக் லைஃப் ஸ்பாட்டில் மணிரத்னம்
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தியன் 2, கல்கி படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட கமல் தற்போது தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்தப் படத்திற்காக 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மணிரத்னத்துடன் இணைந்துள்ளார் கமல். அதன்படி நாயகனுக்குப் பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தக் லைஃப் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி ஆகியோர் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் கோரியோகிராபி செய்து வருகின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பு கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் கமல் மீசை, தாடி இல்லாமல் நடித்திருந்தார். 5 நாட்கள் மட்டுமே நடைபெற்ற தக் லைஃப் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் தான் தொடங்கும் என சொல்லப்பட்டது. மேலும் கமல்ஹாசனும் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கமலுக்காக காத்திருக்காமல் உடனடியாக இரண்டாவது ஷெட்யூலை தொடங்கிவிட்டார் மணிரத்னம். அதன்படி இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சைபீரியா, ரஷ்யா நாடுகளில் நடைபெறுகிறது. இதற்காக மணிரத்னமும் அவரது குழுவினரும் ரஷ்யா சென்றுவிட்டனர்.
இதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக, ரஷ்யாவின் பனி படர்ந்த மலை பிரேதசத்தில் மணிரத்னம் எடுத்துக்கொண்ட செல்ஃபியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஷெட்யூலில் கமல் கலந்துகொள்வது சந்தேகமே என சொல்லப்படுகிறது. அதேநேரம் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் ரஷ்யாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளனர். கமல்ஹாசன் கொஞ்சம் தாமதமாக தக் லைஃப் படப்பிடிப்பில் இணைவார் என சொல்லப்படுகிறது.
எதிர்பார்த்ததை விட தக் லைஃப் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார் மணிரத்னம். 20க்கும் மேற்பட்ட மல்டி ஸ்டார்ஸ் நடித்த பொன்னியின் செல்வன் படத்தையே 120 நாட்களில் ஷூட் செய்து முடித்தார் மணிரத்னம். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்தே 120 நாட்கள் என்றால், தக் லைஃப் ஷூட்டிங் அதைவிட சீக்கிரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தக் லைஃப் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











