Real Thug: ரஜினிகாந்த், கமல்ஹாசனையே லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மணிவண்ணன்.. ‘தக் லைஃப்’ சம்பவங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை கடந்து சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏகப்பட்ட பேர் ரியல் தக்காகவே வாழ்ந்துள்ளனர். பெரிய நடிகர் என்றதுமே பம்மிக் கொண்டு அவர்களுடன் பகைமை பாராட்டக் கூடாது என்றெல்லாம் நினைக்காமல், தங்களுக்கு பெரிய நடிகர்கள் செய்தது சரியல்ல என்று மனதில் பட்டால் அதை அப்படியே அவர்களிடமோ பொதுவெளியிலோ பேசிவிடும் ஆளுமை கொண்டிருந்தனர்.
தமிழ் சினிமாவின் 'தக் லைஃப்' ஆளுமைகள் மற்றும் 'தக் லைஃப்' மொமெண்ட்டுகள் குறித்து பார்த்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் எதிர்த்து பேசிய மணிவண்ணன் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

எழுத்தாளர், இயக்குநர், நடிகர்: 1980ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார் மணிவண்ணன். அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம் என பல படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றினார். மோகன் நடிப்பில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கி இயக்குநராக 1982ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் உதவி இயக்குநராகவே நடித்த மணிவண்ணன் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அமைதிப் படையை மறக்க முடியுமா?: சத்யராஜ் வில்லனாக நடித்த நூறாவது நாள் படத்தை இயக்கிய மணிவண்ணன் சத்யராஜை வைத்து இயக்கிய அமைதிப் படை படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அரசியல் நய்யாண்டி படங்கள் என்றாலே அனைவரது நினைவிலும் முதல் படமாகவே அமைதிப்படை படம் வந்துவிடும். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்துக்கே இன்ஸ்பிரேஷன் அந்த படம் தான் என்றும் கூறுவார்கள். சாதாரண தேங்காய் பொறுக்கி எப்படி அரசியல் தலைவராக மாறுகிறான் என்பதையும் அரசியல் தலைவர்கள் எப்படியெல்லாம் தில்லாலங்கடி செய்வார்கள் என்பதையும் அமாவாசை கதாபாத்திரம் வாயிலாக படமாக்கி அதில், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மணிவண்ணன்.

ரஜினி படத்தையே புடிக்கலைன்னு சொல்லிட்டாரு: கொடி பறக்குது படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் மணிவண்ணன். ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தும் அது அவர் கையை விட்டுச் செல்ல என்ன காரணம் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் தயாரிப்பாளர் ராம் வாசு அளித்த பேட்டியில் கூறிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்புகிறது. ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் படத்தை பார்த்த மணிவண்ணனிடம் படம் பிடித்திருக்கிறதா? என்று ரஜினி கேட்க, படம் நல்லாவே இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர், 5 நாட்கள் கழித்து போன் பண்ண ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் மட்டும் வரவேண்டாம், வேறு யாராவது வர சொல்லுங்க என்றதும் அங்கே சென்ற ராம் வாசுவிடம் இயக்குநரை மாற்றிவிட்டேன் என சொல்லிவிட்டாராம். மணிவண்ணனிடம் இதுபற்றி சொல்ல, சரி விடுடா ரஜினி படத்தை நம்பியா நாம சினிமாவுக்கு வந்தோம் என்று 'தக் லைஃப் பதில் கொடுத்தாராம். ரொம்ப வருடங்களாக ரஜினியுடன் நடிக்காமல் இருந்து வந்த மணிவண்ணன் படையப்பா படத்திலும் நெகட்டிவ் ரோலிலேயே நடித்திருப்பார்.

கமல் பற்றி பகிரங்க பேச்சு: விஸ்வரூபம் பிரச்னை சமயத்தில் கமல்ஹாசன் குறித்து மணிவண்ணன் பேசியது தான் ரியல் தக் லைஃப் மொமண்ட் என்று சொல்ல வேண்டும். கமல்ஹாசன் நாட்டை விட்டு போனால் போகட்டும், அவர் எண்ணம் ஹாலிவுட்டில் செட்டிலாகி நடிகராக வேண்டும் என்பது தான் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் ஏன் எடுக்கணும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் ஒரு ஐயங்கார் தசவதாரம் என்று தான் படமெடுப்பார், சிவனை வைத்தெல்லாம் படமெடுக்க மாட்டார். அவரிடம் நாம் தான் உஷராக இருக்க வேண்டும் என விளாசி தள்ளியதை எல்லாம் மறக்கவே முடியாது. அவ்வை சண்முகி, பம்மல் கே சம்மந்தம் மற்றும் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன் உடன் மணிவண்ணன் நடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











