Thug Life - கமல் - மணிரத்னத்துக்கே தக் லைஃப் கொடுத்த நெட்டிசன்ஸ்.. தக் லைஃப் டைட்டில் வீடியோ காப்பியா?
சென்னை: Thug Life (தக் லைஃப்) கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசம் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரங்கராய சக்திவேல் நாயக்கன்: அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.படத்துக்கு தக் லைஃப் (Thug Life) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
காப்பியா?: இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் கொண்டாடினர். ஆனால் நேரம் செல்ல செல்ல இதே போன்றதொரு வீடியோவை வேறு எங்கேயோ பார்த்திருக்கிறோமே என யோசித்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தனர். அப்போது 2019ஆம் ஆண்டு வெளியான Rise of Skywalker என்ற ஹாலிவுட் படத்திலிருந்து இதை உருவியிருக்கிறார்கள் என்று ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதியோ ஹாலிவுட் படத்தின் காட்சியையும், தக் லைஃப் இன் ட்ரோ வீடியோ காட்சிகளையும் பகிர்ந்து ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே… என கமல் மணிரத்னத்துக்கே தக் லைஃப்பை கொடுத்திருக்கிறார். இதற்கிடையே ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று கமல் ஹாசன் பேசியதற்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











