Thug Life Box Office-முடிஞ்சது போங்க.. இரண்டாவது நாளில் தக் லைஃப் வசூல் இவ்வளவுதானா?..கமலுக்கு சோதனை
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி கர்நாடக மாநிலம் தவிர்த்து அனைத்து இடங்களிலும் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே அப்படத்துக்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்தன. விமர்சன ரீதியாக அடி வாங்கிய படம் வசூல் ரீதியாக தப்பிக்குமா என்ற ஆவலோடு இருந்த படக்குழுவுக்கும், கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் அந்த ஏரியாவிலும் பலத்த அடிதான் கிடைத்திருக்கிறது.
கமல்ஹாசன் எழுதிய கதையை மணிரத்னம் இயக்க; படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டது. இரண்டு பெரிய கலைஞர்கள் இரண்டாவது முறையாக இணையும் படத்துக்கு; இந்தத் தலைமுறையில் ட்ரெண்டிங் இருக்கும் வார்த்தையை பெயராக வைத்திருக்கிறார்களே என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அதன் காரணமாக நிச்சயம் இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.
ஜூன் ஐந்தில் ரிலீஸ்: படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக கமல்ஹாசன் பேசிய ஒரு கருத்து கர்நாடக மாநிலத்தில் படத்துக்கு சிக்கலை உண்டு செய்தது. இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் படம் ரிலீஸாகவில்லை. மற்ற இடங்களில் எல்லாம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியானது. கமலின் ரசிகர்கள் ரிலீஸ் நாளினை திருவிழா போல் கொண்டாடினார்கள். தியேட்டர்களுக்கு வெளியே பட்டாசு வெடித்து அதகளம் செய்துவிட்டு ஆர்வத்தோடு முதல் நாள் முதல் காட்சியில் அமர்ந்தார்கள்.

படு நெகட்டிவ் விமர்சனம்: படத்தின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டும் ரசிகர்களை படம் கவர்ந்தது. ஆனால் போகப்போக ரசிகர்களின் பொறுமையை மணியும், கமலும் சேர்ந்து ரொம்பவே சோதித்துவிட்டார்கள். மேக்கிங், திரைக்கதை, பெரும்பான்மையான வசனங்கள் என ஒன்றில்கூட எதுவுமே இல்லை என்ற எண்ணம் படம் பார்க்க பார்க்க ரசிகர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்து; கடைசியில் படத்தில் ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். இதனால் முதல் காட்சி முடிந்ததுமே தங்களது நெகட்டிவ் விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ட்ரோலும் உண்டு: நெகட்டிவ் விமர்சனம் மட்டுமின்றி இந்தியன் 2 சந்தித்தது போன்று இந்தப் படமும் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதாவது ஏகப்பட்ட பில்டப்புகளோடு உருவாக்கப்பட்டிருந்த படத்தின் மைய கதையே; திரிஷா கதாபாத்திரத்துக்காக கமலும், சிம்புவும் அடித்துக்கொள்வதுதான் என்பதால் அதனை வைத்து கடுமையாக ரசிகர்கள் படத்தையும், கமலையும், மணிரத்னத்தையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சரி விமர்சன ரீதியாகத்தான் இப்படி; வசூல் ரீதியாக கண்டிப்பாக தப்பித்துவிடலாம் என்றுதான் படக்குழு நினைத்திருந்தது.
அங்கும் அடிதான்: ஆனால் அந்த ஏரியாவிலும் படத்துக்கு அடிதான் விழுந்தது. கர்நாடக மாநிலத்தில் படம் வெளியாகததால் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. முதல் நாளில் வசூலிலும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. அதாவது நேற்று முன்தினம் தமிழில் 13.35 கோடி, ஹிந்தியில் 0.65 கோடி, தெலுங்கில் 1.5 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவில் மொத்தமாக 15.5 கோடி ரூபாயைத்தான் படமானது வசூலித்தது.
இரண்டாவது நாள் வசூலும்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் Sacnilk இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய அளவில் மொத்தமாகவே 7.50 கோடி ரூபாயைத்தான் அப்படம் வசூலித்திருப்பதாக சாக்நில்க் தளம் கூறியிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டாவது நாளிலேயே படம் படுத்துவிட்டது. இனி அவ்வளவுதான் என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











