Thug Life: அவசரமாக லண்டன் பறந்த கமல்ஹாசன்... தக் லைஃப் ஷூட்டிங் கேன்சல் ஆக இதுதான் காரணமா..?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் திடீரென தக் லைஃப் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
அவசரமாக லண்டன் பறந்த கமல்ஹாசன்
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. நாயகன் படத்துக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் காம்போவில் தக் லைஃப் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாயகன் திரைப்படம் போல கேங்ஸ்டர் ஜானர் மூவியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தக் லைஃப் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கமலுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றனர். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தக் லைஃப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் தக் லைஃப், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பு கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசனுடன் ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் ஆகியோர் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் கமல் மீசை, தாடி இல்லாமல் நடித்திருந்தார். மேலும் இது ரெட்ரோ லுக்கில் கமலின் பிளாஷ்பேக் போர்ஷனாக ஷூட் செய்துள்ளாராம் மணிரத்னம். 5 நாட்கள் மட்டுமே நடைபெற்ற தக் லைஃப் படப்பிடிப்புக்கு திடீரென பிரேக் விடப்பட்டது.
அதாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு மீசை, தாடியுடன் கூடிய ரங்கட் பாய்ஸ் லுக்கில் கமல் பங்கேற்பார் என சொல்லப்பட்டது. அதனால் தான் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் உடனடியாக அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேரமாக படப்பிடிப்பில் இருந்ததால் தான் கமலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலில் கமல் இல்லாமல், துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரது போர்ஷனை மட்டும் ஷூட் செய்ய மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம். லண்டனில் இருந்து திரும்பிய பின்னர் கமல்ஹாசனும் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











