Thug Life Ticket Booking: தக் லைஃப் படத்துக்கு பெருகும் ஆதரவு.. அட்வான்ஸ் புக்கிங் இத்தனை கோடியா?
சென்னை: விண்வெளி நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் கிளம்பியுள்ள சர்ச்சைக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. ஆனால், கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரித்த் சிங், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 பாக்ஸ் ஆபீசில் படுதோல்வியை சந்தித்தது.

கன்னட மொழி உணர்வுடன் கர்நாடகாவில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் உணர்வுடன் கமல்ஹாசன் தொடர்ந்து மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என ரியல் தக்காகவே மாறியுள்ள நிலையில், அவருக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம் என ரசிகர்கள் தக் லைஃப் படத்தை ரிப்பீட் மோடில் பார்க்க ரெடியாகி உள்ளனர்.
இந்தியில் பேச மாட்டேன்: தக் லைஃப் படம் பான் இந்தியா அளவில் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஆனால், படத்தின் புரமோஷனுக்காக மும்பைக்கு சென்ற போதிலும், கமல்ஹாசன் இந்தியில் பேச மாட்டேன் என மறுத்து தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவேன் என்றது அரம்பத்தில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அது பெரிதாக வெடிக்கவில்லை. தமிழ்நாட்டில் தக் லைஃப் படத்துக்கான ஆதரவு பெருக கமல்ஹாசனின் மொழிப்பற்றும் முக்கியமான அம்சமாக தற்போது மாறிவிட்டது.
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்: தமிழ்நாடு முதல் இலங்கை வரை தமிழ் மொழியில் தான் மக்கள் பேசுகின்றனர். பல மலையாள பிரபலங்கள் தமிழ் மொழியை பாராட்டி வருகின்றனர். தென்னிந்தியா மொத்ததும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை சொல்லும் தொனியில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல்ஹாசன் பேசிய நிலையில், கன்னட மொழியை அவமானப்படுத்தி விட்டார் கமல்ஹாசன் என அவருக்கு எதிரான போராட்டங்கள் கர்நாடகாவில் வெடித்து வருகின்றன. ஆனால், தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் கமல்ஹாசன் உறுதியாக நின்று தவறாக பேசியிருந்தால் மன்னிப்புக் கேட்பேன், தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கெத்துக் காட்டியுள்ள நிலையில், இதுதான் தமிழனின் வீரம் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

தக் லைஃப் அட்வான்ஸ் புக்கிங் அனல் பறக்குது: இதுவரை கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் இந்தியளவில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 77 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் இன்னமும் காலை 9 மணி காட்சிகளுக்கான முன் பதிவு தொடங்கப்படவில்லை. அதற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் புக்கிங் எல்லாமே ஆரஞ்சு அலர்ட்டில் காணப்படுகிறது. சீக்கிரமாகவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூல் உலகளவில் 40 முதல் 50 கோடி வரை இருக்கும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துவிட்டால் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படைக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











