என்ன சொல்றீங்க.. துணிவு 330 கோடி வசூலா? வில்லன் நடிகர் ஜான் கொக்கனே சொல்லிட்டாரே!
சென்னை: வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களும் வெளியாகி தியேட்டரில் 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றன.
கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் துணிவு படம் வெளியானது.
இதுவரை அந்த படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்தில் நடித்த ஜான் கொக்கன் துணிவு படம் 330 கோடி வசூல் செய்ததாக செய்தித் தொலைக்காட்சியில் வெளியான ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்துப்போட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அஜித்தின் துணிவு
இந்த முறை விஜய்யுடன் மோதியே தீர வேண்டும் என்கிற முனைப்புடன் வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடு என அறிவித்த நிலையில், துணிவு படமும் அதே நாளில் வெளியானது. வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி ஷோ என்றால், அஜித்தின் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கே திரையரங்குகளில் வெளியானது. அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் துணிவு தூளாக இருக்கிறது என பாராட்ட ஆரம்பித்தனர்.

கலவையான விமர்சனம்
ஆனால், அஜித்தின் துணிவு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவியாமல் விஜய்யின் வாரிசு படத்துக்கு குவிந்ததை போலவே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. மேலும், படத்தின் செகண்ட் ஹாஃப் காட்சிகளில் லாஜிக்கே இல்லை என்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் படு மோசம் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றினர்.

300 கோடி வாரிசு
தயாரிப்பாளர் போனி கபூர் கடைசி வரை அஜித்தின் துணிவு படத்தின் வசூல் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் பெயருக்கு கூட வெளியிட வேண்டாம் என அமைதியாகி விட்டார். அதே சமயம் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு படத்தின் வசூல் நிலவரத்தை அடிக்கடி சொல்லி வந்த நிலையில், இறுதியாக வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

50வது நாள் கொண்டாட்டம்
ஜனவரி 11ம் தேதி வெளியான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றன. தியேட்டர்களில் 50வது நாள் ஸ்பெஷல் ஷோக்களை ரசிகர்கள் மன்றங்கள் உற்சாகமாக நடத்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில், துணிவு படம் 330 கோடி வசூல் செய்துள்ளதாக திடீரென அஜித் ரசிகர்களும் சில மீடியாக்களும் டிரெண்ட் செய்ய தொடங்கினர்.

330 கோடி வசூல்
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 190 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் உலகளவில் என பிஸ்மி உள்ளிட்ட டிராக்கர்கள் கணித்து சொல்லி உள்ள நிலையில், தற்போது அதெல்லாம் இல்லைங்க நாங்க தான் நம்பர் ஒன் துணிவு திரைப்படம் அதிரடியாக 330 கோடி வசூல் செய்துள்ளது என அஜித் ரசிகர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

துணிவு நடிகரே சொல்லிட்டாரே
அதிகாரப்பூர்வமாக துணிவு டீமில் இருந்து யாரும் சொல்லவில்லையே என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்த 330 கோடி வசூல் உருட்டு என ட்ரோல் செய்து வந்த நிலையில், துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் ஜான் கொக்கனே துணிவு திரைப்படம் 330 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியான போஸ்டரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து அதனை உறுதி செய்திருக்கிறார். ஜான் கொக்கனின் பதிவு அஜித் ரசிகர்களை வேறமாறி கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











