இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்களுக்கு கூட்டம் வராததற்கு காரணமே இதுதான் - திருப்பூர் சுப்ரமணியம்
சென்னை: தமிழ்நாட்டில் படங்கள் காலை 9 மணிக்குத் திரையிடுவதை போல மற்ற மாநிலங்களிலும் தமிழ் படங்களை 9 மணிக்குத் திரையிட தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றும் புதிய படத்தை குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு விமர்சிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்தும் விஜய், அஜித்தை நம்பி தியேட்டர்கள் இல்லை என்றும் பேசிவந்த அவர், தற்போது விமர்சகர்கள் குறித்தும் குறிப்பாக யூடியூபில் முதல் ஷோ முடிந்ததுமே வரும் மக்கள் விமர்சனம் குறித்தும் தனது அச்சத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான டாப் நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் தியேட்டரில் மக்கள் கூட்டத்தை வரவைக்க முடியாமல் திணற காரணமே விமர்சனங்கள் தான் என்கிற வெடிகுண்டை போட்டுள்ளார்.
எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஷோ: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் புதிய படங்கள் வெளியானால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டில் 9 மணிக்குத்தான் சிறப்புக்காட்சிக்கான அனுமதியே உள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே படங்கள் திரையிடுவதால் அங்கிருந்து 7 மணிக்குள் சோஷியல் மீடியா மூலம் பரவும் விமர்சனங்கள் 9 மணிக்கு வரக்கூடிய கூட்டத்தையே தவிர்த்து விடுகிறது. அதனால், அனைத்து இடங்களிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் என ஆடியோ மெசேஜ் ஒன்றை திருப்பூர் சுப்ரமணியம் அனுப்பியுள்ளார்.
2 வாரத்துக்கு விமர்சனம் கூடாது: புதிய படங்கள் வெளியானால் அந்த படங்கள் குறித்து நெகட்டிவாக பேசினால் தான் யூடியூப் சேனலில் லாபம் பார்க்கலாம் என நினைத்து பல விமர்சகர்கள் படுமோசமாக படங்களை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். பல கோடி செலவு செய்து படங்களை எடுத்து தியேட்டருக்கு கொண்டு வரும் தயாரிப்பாளர்களுக்கு இந்த விமர்சனங்கள் காரணமாக தொழில் பாதிக்கிறது. கேரளாவில் ஒரு தயாரிப்பாளர் வழக்குத் தொடர்ந்து விமர்சனங்களை சில நாட்களுக்கு ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதை அறிந்தேன். இங்கேயும் அதை 2 வாரத்துக்கு நடைமுறை படுத்தலாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்களுக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் பெரிய பங்கை ஆற்றியுள்ளன என்றும் பல கோடி ரூபாய் தமிழ் சினிமாவுக்கு விமர்சனத்தால் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யூடியூபர்களை உள்ளே விடாதீங்க: எந்தவொரு புதிய படம் வந்தாலும் அதிகாலையிலேயே படம் முடிந்ததும் தியேட்டர் வாசலில் நின்றுக் கொண்டு படம் எப்படி இருக்கு? என மக்கள் கருத்தை வெளியிடுகிறோம் என்கிற பெயரில் படத்தை பல யூடியூப் சேனல்கள் காலி செய்து வருகின்றனர். சில யூடியூப் சேனல்கள் படம் வெளியாகும் முன்பே பழைய வீடியோ காட்சிகளை எடிட் செய்து புதிய படத்துக்கான பப்ளிக் ரிவ்யூ போல போட்டு வருகின்றனர். அதையெல்லாம் அனுமதிக்கவே கூடாது. தியேட்டர் ஓனர்கள் தங்கள் வளாகத்திற்குள் பப்ளிக் விமர்சனங்களை அனுமதிக்கவே கூடாது என்றும் அதுதான் நம்முடைய தொழிலை பெரிதும் பாதிப்பதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இதெல்லாம் சாத்தியமா?; சோஷியல் மீடியா காலத்தில் கையில் ஸ்மார்ட் போன் வைத்துக் கொண்டு படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விமர்சனங்களை ட்விட்டர் விமர்சனங்களாகவே பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தட்டி வருகின்றனர். ஒரு சிறிய பட்ஜெட் படங்களை பாராட்டி தூக்கி நிறுத்த விமர்சனங்கள் முக்கிய தேவை என நினைக்கும் போது, படம் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்தாலும் ரசிகர்களை ஏமாற்றி அவர்கள் தலையில் டிக்கெட்டுகளை கட்டி வியாபாரம் நடத்த முடியாது என்பதை எப்போது புரிந்துக் கொள்வார்கள் என்று தான் தெரியவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் கருத்துக்கு சமூக வலைதளத்தில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











