அண்ணாமலையார் கோயிலிலிருந்து வந்த மரியாதை.. மயில்சாமியின் இறுதி சடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: நடிகர் மயில்சாமி உயிரிழந்த சூழலில் அவரது உடலுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலிருந்து மரியாதை செலுத்தப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. நகைச்சுவை மட்டுமின்றி பல குரல் மன்னனாகவும் திகழ்ந்தவர் அவர். வடிவேலு, விவேக் என முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவைகள் அனைத்தும் காலம் கடந்து பேசப்படுபவை.

ஆல் இன் ஆல் அழகுராஜா மயில்சாமி
தற்போது இருக்கும் பல குரல் மன்னன்களுக்கு முன்னோடி மயில்சாமி எனலாம். அடுத்தவரின் குரல்களை நகல் எடுப்பது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளுக்கும் தனது குரலால் வலு சேர்த்தவர் மயில்சாமி. நகைச்சுவை, பல குரல் என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் சிறப்பாக தொகுத்தும் வழங்கியவர்.

உதவி என்றால் மயில்சாமிதான்
இப்படி பல சிறப்புகளை கொண்டிருந்த மயில்சாமியின் தலையாய சிறப்பு அடுத்தவருக்கு உதவி செய்வது. தன்னால் முடிந்த அளவு உதவி செய்ததோடு மட்டுமின்றி தனது சக்திக்கு மீறியும் அவர் பல உதவிகளை செய்திருக்கிறார். உதவி செய்வதற்காக கடன் வாங்கவும் யோசிக்காத அவர் ஒருகட்டத்தில் தனது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தும் உதவிகளை புரிந்திருக்கிறார். அதுகுறித்து பலரும் தற்போது விளக்கமாகவே பேசிவருகின்றனர்.

தீவிர சிவபக்தர் மயில்சாமி
மயில்சாமி தீவிர சிவபக்தர் ஆவார். வருடாவருடம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஜோதியில் கலந்துகொள்ளும் அவர் கிரிவலமும் செல்வார். அதேபோல் சிவராத்திரிக்கும் இரவு முழுவதும் விழித்திருப்பார். மேலும் திருவண்ணாமலைக்கு செல்லும் அவர் அங்கிருந்து ரஜினியை தொடர்புகொண்டு அடிக்கடி பேசுவாராம். இதனை மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ரஜினியே வெளிப்படுத்தினார்.

சிவராத்திரியில் விழித்த மயில்சாமி
அந்தவகையில் கடந்த சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் ட்ரம்ஸ் சிவமணியுடன் கலந்துகொண்டார். அப்போது அவரது இசையை ரசித்து கேட்ட மயில்சாமி அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி
அதனையடுத்து மயில்சாமியின் உடலுக்கு பார்த்திபன், பிரபு, எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா, உதயநிதி என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.எஸ்.பாஸ்கர் மயில்சாமியின் இழப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுதார். ரஜினிகாந்த் இன்று காலை வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அண்ணாமலையார் கோயிலிலிருந்து வந்த மரியாதை
இந்நிலையில், மயில்சாமி உடலுக்கு அண்ணாமலையார் கோயிலிருந்து பூஜிக்கப்பட்ட வெட்டிவேர் மாலை அணிவிக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கோயிலின் குருக்கள் அந்த மாலையை அணிவித்துவிட்டு அண்ணாமலையாரின் தீவிர பக்தர் மயில்சாமி என உருக்கமாக கூறினார். இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மேலும், ஒரு தீவிர பக்தருக்கு இதைவிட என்ன பாக்கியம் கிடைத்துவிடப்போகிறது எனவும் நெகிழ்ந்துவருகின்றனர்.

வடபழனியில் உடல் தகனம்
மயில்சாமியின் இறுதி ஊர்வலமானது சாலிகிராமத்திலிருந்து புறப்பட்டு வடபழனியில் முடிவடைந்தது. அந்த ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இறுதி ஊர்வலம் சென்ற வழியெங்கும் பொதுமக்களும் நின்று தங்களது இறுதி அஞ்சலியை மயில்சாமிக்கு செலுத்தினர். அவரது உடலானது வடபழனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











