விஜய்யை கலாய்த்து TN 2026 திரைப்படம்.. ரிலீஸுக்கு தடையா?.. சிக்கல் வர ஆரம்பித்துவிட்டது
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இயக்கியிருக்கும் திரைப்படம் TN 2026 திரைப்படம். இதில் நட்டி நட்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் பத்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க இந்தப் படம் விஜய்யை கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்ற பிம்பத்தை படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிவிட்டது. இந்நிலையில் படத்துக்கு பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது.
கோலிவுட்டில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது வெற்றிகரமான குணசித்திர நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுடனும் அவர் நடித்துவிட்டார். அவரது மகன் உமாபதியும் எப்படியாவது திரைத்துறையில் வென்றுவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்த அவருக்கு; நினைத்தபடி நடக்கவில்லை. தொடர்ந்து ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கினார். அதுவும் தோல்விதான். இப்படிப்பட்ட நிலைமையில்தான் TN 2026 படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தில் யார்? யார்?: இப்படத்தில் ஹீரோவாக நட்டி நட்ராஜ் நடித்திருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடிங் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், ஸ்ரீட்டா ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இதன் மூலம் எப்படியாவது ஒரு வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் உமாபதி உழைத்திருக்கிறாராம். படமானது ஏப்ரல் பத்தாம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் விஜய்யையும், அவரது அரசியல் பிரவேசத்தையும், அவரது கட்சியினரையும் செமத்தியாக கலாய்த்து சீன்கள் இருந்தன. விஜய் இப்போது பொதுவெளிக்கு வரும் வெள்ளை சட்டை, சந்தன பேண்ட் அணிந்து விஜய்யை இமிட்டேட் செய்திருந்தார் நட்டி. இதை பார்த்த தவெகவினர் காண்டாகிவிட்டார்கள். மேலும் இதுவும் திமுக சதிதான் என பேச தொடங்கிவிட்டார்கள்.
விளக்கமளித்த படக்குழு: தொடர்ந்து இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பித்தது. விபரீதத்தை புரிந்துகொண்ட உமாபதி, நட்டி, தம்பி ராமையா உள்ளிட்டோர் இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் விளக்கம் கொடுத்தார்கள். விஜய் ஒரு சிங்கம். அவரை யாராலும் பழிக்க முடியாது என உமாபதி சரண்டர் ஆனார். தம்பி ராமையாவோ, தம்பி ஆதவ் அர்ஜுனா இந்தப் படத்தில் கிண்டல் செய்யும்படி நூல் அளவு கூட இருக்காது என உருகினார். மேலும் நட்டி, 'விஜய் தரப்பிலிருந்து நேரில் அழைத்தால் படக்குழு மொத்தமும் சென்று விளக்கமளிக்க தயார்' எனவும் கூறினார்.
தடை கேட்டு மனு: நிலைமை இப்படி இருக்க இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்னதாக ரிலீஸ் செய்யக்கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், 'ஜனநாயகன் படத்தை மட்டும் ரிலீஸுக்கு அனுமதிக்காதபோது TN 2026 படத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாம். தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்பாக இந்தப் படம் வருவது வாக்காளர்களிடையே சார்பு நிலையை உருவாக்கிவிடும். எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்' என கோரியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















