சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. இது எப்போ நடந்தது? அவரே சொல்றாரே
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தமிழ்நாடு அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிலருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி, மூன்று திரைப்பிரபலங்களின் விக்கெட்டை கைப்பற்றியதாக கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், ஒருமுறை திரைப்பட கலைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் நான் ஒரு அணியில் பவுலராக கலந்து கொண்டேன். அப்போது நான் பந்து வீசி, எதிரணியில் மூன்று நடிகர்களின் விக்கெட்டை கைப்பற்றினேன். அதாவது நடிகர் சிலம்பரசன், நடிகர் நெப்போலியன் மற்றும் இன்னொரு நடிகரின் விக்கெட்டை கைப்பற்றினேன். அந்த இன்னொரு நடிகர் யார் என்று தெரியவில்லை. இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஆஃப் - ஸ்பின் பந்து போட்டுத்தான் கைப்பற்றேன்.

கிரிக்கெட் மீது எனக்கு எப்போதும் தீராத ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது புக் கிரிக்கெட் எல்லாம் விளையாடி உள்ளேன். ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், நான் எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருப்பேன். எனது அப்பா கலைஞர் கருணாநிதியுடன் எல்லாம் நான் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவருக்கும் நான் ஆஃப் - ஸ்பின் பந்து போட்டுள்ளேன்.
எனது இளமைக் காலத்தில் நான் பார்த்து வியந்து பிரியப்பட்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது முன்னாள் கேப்டன் கபில்தேவ் தான். அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த முதல் கேப்டன். அதன் பின்னர் கவாஸ்கர், அதன் பின்னர் சச்சின் தெண்டுல்கர், அதற்கடுத்து தோனி என இவர்கள் அனைவரையும் பிடிக்கும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் பிடிக்கும் என்று அவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார். சிலம்பரசன் மற்றும் நெப்போலியன் விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார் என்ற தகவலை பலரும் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











