"இசை உலகின் மகுடம்".. இளையராஜாவின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டிய முதல்வர் விஜய்!
சென்னை: தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வரும் இசை உலகின் மகுடம் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (X) பக்கத்தில் நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா இன்று தனது 83ஆவது அகவையில் அடி எடுத்துள்ளார். அவருக்கு காலை முதலே அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைக் குவித்து வரும் நிலையில், முதல்வரின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

பண்ணைப்புரம் டூ சிம்பொனி: இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலப் பயணம் மற்றும் அவரது அசாத்திய சாதனைகள் குறித்து முதலமைச்சர் தனது பதிவில் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர் இளையராஜா. 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்து, இன்று உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
தலைமுறைகள் தாண்டிய இசை: இளையராஜாவின் இசை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது எதிர்காலத்திற்கான வழிகாட்டி என்பதை உணர்த்தும் வகையில், உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் வாழ்த்துகள் என முதல்வர் ஜோசப் விஜய்நெஞ்சம் உருகி வாழ்த்தி உள்ளார்.
மீண்டும் மீண்டும் நன்றி: இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில், நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், செய்திகள் மூலமாக வாழ்த்து கூறியவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கும் என்னுடைய நன்றிகள். என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்து உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications