Captain Vijayakanth: கேப்டன் மறைவு.. திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி!
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவால் தமிழகத்தில் ரசிகர்கள், தொண்டர்கள் அளவுக்கதிகமான சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஆனாலும் அவரது வீட்டின் முன்பு முகாமிட்டிருந்த காலன், அவரை அழைக்காமல் போக மாட்டேன் என்று கங்கணம் கட்டியதன் விளைவாக, இன்று அவர் நம்முடன் இல்லை.
இதையொட்டி ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல்கட்டி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அவரது வீட்டின் முன்பு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முகாமிட்டுள்ளனர். அவருடன் நெருக்கான உறவு பாராட்டிவந்த நடிகர்கள், பிரபலங்கள் கண்ணீர் விட்டு கதறியதை பார்க்க முடிந்தது. கருப்பு எம்ஜிஆர் என்ற போற்றுதலுக்கு உரித்தான விஜயகாந்த் நீண்ட ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆறுதல் ரசிகர்கள், தொண்டர்களிடையே இருந்தது. அதற்கும் தற்போது பாதகம் வந்துவிட்டன. இன்றைய தினம் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த்: அகல்விளக்கு என்ற படம் மூலம் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததுடன், அரசியலிலும் சிறப்பான பங்காற்றி தேமுதிக என்ற கட்சியை நிறுவி, அதன்மூலமும் மக்களுக்கு தொண்டாற்ற முடியும் என்று நிரூபித்த விஜயகாந்த், பலரது வாழ்க்கையில் வெளிச்சம் கொடுத்தவர். தூரத்து இடிமுழக்கமாக இல்லாமல், அனைவருக்கும் அவர்களது கண்ணுக்கு தெரியும் விளக்காக இருந்தவர். அந்த விளக்கின் ஒளிதான் இன்றைய தினம் மறைந்துள்ளது.
காலை காட்சிகள் ரத்து: கேப்டனின் மறைவு இந்திய அளவில் மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடியும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்களும் விஜயகாந்த் மறைவுக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்தின் மறைவால் அதிகமான துயரை வெளிப்படுத்தியுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் அதிரடி முடிவை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று திரையரங்குகளில் காலை காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
வாழையிலையில் சோறு போட்டவர்: அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் விஜயகாந்த். ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தை துவங்கியபோது, பொட்டலத்தில் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்ட நிலையை மாற்றியவர் விஜயகாந்த். முதன்முதலில் மற்றவர்களுக்கு இலை போட்டு சோறு போட்டவர் விஜயகாந்த். இதை அவரே பேட்டியொன்றில் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். தான் சாப்பிடுவதைதான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்ற வழக்கத்தை கொண்டுவந்தவர் விஜயகாந்த். தான் நான் வெஜ் சாப்பிட்டாலும் கூல் டிரிங்ஸ், இளநீர் என எதை சாப்பிட்டாலும் மற்றவர்களுக்கும் அதை சமமாக பகிர்ந்தவர்.

திரையுலக பிரபலங்கள் அஞ்சலி: திரையுலகில் விஷால், திரிஷா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தும்வகையில் தன்னுடைய சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் நடிகர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் விஜயகாந்த் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











