இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் எப்படி இருக்கும்?.. இன்று வெளியான 10 படங்கள்.. எதெல்லாம் வொர்த்!
சென்னை: கடந்த வாரம் வெளியான சூரியின் மாமன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான ஜோரா கைய தட்டுங்க என 3 படங்களுமே பெரியளவில் வசூல் வேட்டையை குவிக்கவில்லை. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் படங்கள் தலா 10 கோடி அளவுக்கு வசூல் செய்து போதுமான வசூலை அள்ளினாலும் தமிழ் சினிமாவுக்கு அந்த வசூல் எல்லாம் போதாது என்கின்றனர்.
இந்நிலையில், இந்த வாரமும் ஒட்டுமொத்தமாக 10 புதிய படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ஒரு சில படங்களை தவிர ரசிகர்களை கொஞ்சமாவது தியேட்டருக்கு படங்கள் கொண்டு வருமா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி தான் என்கிற நிலையிலேயே உள்ளது.

இந்த வாரம் தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகியுள்ள படங்கள் குறித்தும் அதில் கொஞ்சமாவது தியேட்டர்களுக்கு மக்களை கொண்டு வரும் படங்கள் குறித்தும் லேசான அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..
டல்லடிக்கும் தமிழ் சினிமா: பெரிய நடிகர்களின் படங்களை தாண்டி வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களே ரசித்துப் பார்க்கும் அளவுக்கு அவ்வப்போது உருவாகினாலும், தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் அளவுக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுக்கும் படங்களோ, மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்களோ அத்திப்பூத்தது போல கூட உருவாகவில்லை என்பது வருத்தத்தை தான் தருகிறது.

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்: எப்படியாவது கடனை உடனை வாங்கி படங்களை எடுத்து ரிலீஸ் செய்து பெரிய ஆளாக மாறிவிடலாம் என பல தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். வார வாரம் பல படங்கள் வெளியானாலும், குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே அதிகப்படியான மக்களை தியேட்டர்களை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இந்த வாரம் ஏஸ், நரிவேட்டை (டப்பிங்), வேம்பு, மையல், ஸ்கூல், அகமொழி விழிகள், ஆகக் கடவன, திருப்பூர் குருவி, ஆசாதி (டப்பிங்), லிலோ அண்ட் ஸ்டிட்ச் (டப்பிங்) படங்கள் வெளியாகி உள்ளன.
எதெல்லாம் வொர்த்: இந்த படங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த், யோகி பாபு நடிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ள ஏஸ் திரைப்படம் மட்டுமே காமெடி கலாட்டா படமாக உருவாகி ரசிகர்களை தியேட்டர்களில் சிரிக்க வைக்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடித்துள்ள நரிவேட்டை படத்துக்கும் ஓரளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. மற்ற சிறிய பட்ஜெட் படங்கள் சிறப்பாக பர்ஃபார்மன்ஸ் செய்தால் மட்டுமே இந்த வார இறுதி நாட்களில் வசூலை அள்ளும் என்கின்றனர். மற்றபடி பிளாக்பஸ்டர் என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு படம் கூட இந்த வாரம் வெளியாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
தக் லைஃப், கூலி காப்பாற்றுமா?: இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் நம்பிக்கொண்டிருக்கும் பெரிய படங்கள் என்றால் அது ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படங்கள் மட்டும் தான். இந்த 2 படங்களும் 300 முதல் 500 கோடி வசூலையும் அதற்கு மேல் வசூலை ஈட்டினால் தான் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான ஆண்டாக அமையும் என்கின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் மதராஸி, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











