ரஜினிக்கு மட்டுமில்ல... இன்னைக்கு இவருக்கும் தான் பிறந்தநாள்.. ஹேப்பி பர்த்டே சேரப்பா!
இயக்குனர் நடிகர் சேரனுக்கு இன்று பிறந்தநாள்.
சென்னை: இயக்குனர் நடிகர் சேரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிக்கட்டு ஆகிய படங்களில் இயக்குனராக மட்டுமே வேலை பார்த்த சேரன் சொல்ல மறந்த கதை படம் மூலம் நடிகராகவும் மாறினார்.

அந்த படத்தை தொடர்ந்து, தான் இயக்கிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். மேலும், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், முரண் உள்பட மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து பாராட்டுகளை குவித்தார்.
ஜே.கே எனும் நண்பனின் கதை படத்தை எடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்த சேரன், அதன் காரணமாக பல பிரச்சினைகளில் சிக்கினார். அதில் இருந்து மீண்டு வந்து சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் படத்தை இயக்கினார்.
பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போதைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு தன்னை நன்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் சேரன்.
விஜய் சேதுபதியின் படத்தை இயக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் சேரன். இன்று அவருக்கு பிறந்தநாள். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்... ஹேப்பி பர்த்டே சேரன் சார்..


Click it and Unblock the Notifications











