HBD Thiagarajan - மகனுக்காக நடிப்பை விட்ட தந்தை.. பிறந்தநாள் வாழ்த்துகள் தியாகராஜன்
சென்னை: Happy Birthday Thiagarajan (பிறந்தநாள் வாழ்த்துகள் தியாகராஜன்) நடிகர் பிரசாந்த்தின் தந்தையும், நடிகரும் இயக்குநருமான தியாகராஜனின் 77ஆவது பிறந்தநாள் இன்று.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனான தியாகராஜன் மெடிக்கல் ரெப்ரெஸெண்டேட்டிவாக திகழ்ந்தவர். அதனையடுத்து கால சூழ்நிலை காரணமாக சினிமாவுக்குள் நுழைந்த அவர் முதலில் ஆடியோ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். அப்போது இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டது.

ராஜாஸ் சினி கம்பைன்ஸ்: இளையராஜா, பாரதிராஜாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாற மூன்று பேரும் இணைந்து படங்களை விநியோகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி ராஜாஸ் சினி கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுக்கள் படத்தை சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்தனர். தொடர்ந்து பல படங்களை விநியோகம் செய்துவந்த தியாகராஜனை பாரதிராஜா நடிகராக அறிமுகப்படுத்தினார்.
அலைகள் ஓய்வதில்லை: பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு கணவராக நடித்திருந்தார். கொடூர கணவரான அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்த தியாகராஜன் முதல் படத்திலேயே பட்டித்தொட்டியெங்கும் நடிகராக புகழடைந்தார். குறிப்பாக தியாகராஜன் போல தனக்கு ஒரு கணவர் வந்துவிடவேக்கூடாது என படம் பார்த்த பெண்கள் நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

குவிந்த வாய்ப்புகள்: அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவரது சிறந்த நடிப்பை பார்த்த பிறகு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் அந்தி மயக்கம், டிக் டிக் டிக், பாயும் புலி, முள் இல்லாத ரோஜா, நாடோடி ராஜா, நெஞ்சங்கள் என பல படங்களில் நடித்து பிஸியாக நடித்தார். இவரது திறமையை பார்த்த பாலுமகேந்திரா தான் இயக்கிய நீங்கள் கேட்டவை படத்திலும் நடிக்க வைத்தார். அது அப்போதைக்கு பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
புரட்டிப்போட்ட மலையூர் மம்பட்டியான்: தியாகராஜன் பல படங்களில் நடித்தாலும் அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது மலையூர் மம்பட்டியான் திரைப்படம். இன்றுவரை தியாகராஜன் என்றாலே மம்பட்டியானாக நடித்தாரே அவர்தானே என பலரும் கூறுவார்கள். அப்படத்தில் மம்பட்டியானாக நடித்து அதகளம் செய்திருந்தார். இளையராஜா இசையமைக்க ராஜசேகர் படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தியாகராஜன்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த தியாகராஜனுக்குள் ஒரு இயக்குநர் இருந்தார். அவரை வெளிக்கொண்டு வரும் விதமாக பூவுக்குள் பூகம்பம் படத்தை முதன்முதலாக இயக்கினார். படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்ற சூழலில் தொடர்ந்து சேலம் விஷ்ணு, ஆணழகன், மன்னவா, ஷாக், ஜெய், மம்பட்டியான் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனிக்கப்படும் இயக்குநராகவும் வலம் வந்தார்.
எம்ஜிஆருடன் நெருக்கம்: அலைகள் ஓய்வதில்லை படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போதிலிருந்து எம்ஜிஆருக்கும் தியாகராஜனுக்கும் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது. தியாகராஜனின் குண நலன்கள் எம்ஜிஆருக்கு பிடித்துவிட தியாகராஜன் இயக்கிய பூவுக்குள் பூகம்பம் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதைப் பார்த்த கோடம்பாக்கம் எம்ஜிஆர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. அப்படி கலந்துகொள்ளும் அளவுக்கு தியாகராஜன் எம்ஜிஆருக்கு நெருக்கமா என ஆச்சரியமும் ஏற்பட்டது.

மகனுக்காக தந்தை ஆற்றிய உதவி: பிரசாந்த்தை மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் தியாகராஜனின் ஆசை. ஆனால் கால சூழ்நிலை அவரை நடிகராக்கிவிட்டது. பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்கள் ஹிட்டாகி அவருக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைக்க ஆரம்பித்தது தான் பீக்கில் இருந்தபோதே நடிப்பதை நிறுத்திவிட்டார் தியாகராஜன். ஏனெனில் அப்போது தியாகராஜன் கொஞ்சம் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். எனவே தனக்குள்ள இமேஜ் பிரசாந்த்துக்கு சென்றுவிடக்கூடாது என அஞ்சி அந்த முடிவை தைரியமாக எடுத்தார் தியாகராஜன்.
பிரசாந்த்தை செதுக்கிய தியாகராஜன்: தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் நடிக்க வந்தாலும் அவர் திறமை வளர்ந்ததற்கு முழுக்க முழுக்க தியாகராஜன் தான் காரணம். ஏனெனில் அவரை சிறு வயதிலேயே பியானோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், நடனம் என பலவற்றை கற்றுக்கொள்ள வைத்தார் தியாகராஜன். அது பிரசாந்த்துக்கு சினிமாவில் வெல்ல ரொம்பவே உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தகன்: பிரசாந்த் ஃபீல்ட் அவுட்டாகி சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை அந்தகன் படத்தின் மூலம் தொடங்குகிறார். அந்தப் படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை தியாகராஜனே இயக்குகிறார். ஒரு மகன் தன்னைவிட உயரத்தில் இருக்கும்போது பார்த்து பெருமைப்படுவதும், சில காரணங்களால் கீழே விழுந்திருக்கும்போது பொறுமையாக துணை நின்று மகனுக்கு வேண்டியதை செய்பவர் சிறந்த தந்தை. அதைத்தான் தியாகராஜன் பிரசாந்த்துக்கு செய்துகொண்டிருக்கிறார். அந்த சிறந்த தந்தைக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











