பன்முக திறமை கொண்ட மனோபாலா.. இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்
சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், யூட்யூபர் என்று பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த அவர் நடிகராகவும் கலக்கியவர். அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் அனைவரையும் ரசிக்க வைத்தவை. அதேபோல் சதுரங்க வேட்டை என்ற அருமையான படத்தையும் தயாரித்தவர். அவர் கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
இயக்குநர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் மனோபாலா. கமல் ஹாசன் செய்த பரிந்துரையாலும், மனோபாலாவுக்கு இருந்த திறமையாலும் அவரை உதவி இயக்குநராக இணைத்துக்கொண்டார் பாரதிராஜா. முதல் படத்திலேயே அவரது திறமையை புரிந்துகொண்ட பாரதிராஜா தன்னிடம் நெருங்கி பழகும் உதவி இயக்குநர்களில் ஒருவராக அவரை அணுக வைத்தார். இதன் காரணமாக பாரதிராஜாவின் முதன்மை சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

இயக்குநராக மனோபாலா: டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்து பச்சை, ஊர்க்காவலன் என தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக தனது முத்திரையை பதித்திருக்கிறார்.
நடிப்பில் அசத்திய மனோபாலா: இயக்கம் மட்டுமின்றி அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே சிறு சிறு வேடங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன. இயக்கத்திற்கான வாய்ப்பு குறைந்ததை அடுத்து முழு நேர நடிகராக மாறினார் மனோபாலா. அப்படி அவர் நடித்த பிதாமகன், பேரழகன், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஏராளமான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அவரது இயல்பான நடிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது.
தயாரிப்பாளர்: இயக்குநர், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அசத்தியவர் மனோபாலா. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் ஹெச்.வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் மனோபாலாதான். சதுரங்க வேட்டை போன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை அதுவும் ஒரு புதுமுக இயக்குநரை நம்பி பணம் போடும் தைரியம் மனோபாலாவுக்கு இருந்ததை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது.
மாற்றிக்கொண்ட மனோபாலா: தற்போதைய காலம் யூட்யூப் காலம் ஆகிவிட்டதை உணர்ந்துகொண்ட மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதுமட்டுமின்றி தனது அனுபவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய பாணியில் பகிர்ந்துகொள்வதும் ரசிக்கும்படி இருக்கும்.
உயிரிழப்பு: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், யூட்யூபர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா யாரையும் வெறுக்காதவர். திரைத்துறையில் சங்கங்களுக்கு இடையே ஏதோ ஒரு பிரச்னை என்றால் தூது புறாவாக மனோபாலா பல முறை சென்றிருக்கிறார். செல்வதோடு மட்டுமின்றி அந்தப் பிரச்னை தனது சுமூகமான பேச்சாலும், செயலாலும் முடித்துவிட்டே வருபவர்.
யாரிடமும் ஈகோ பார்த்ததே இல்லை என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் சொல்வதுண்டு. நிலைமை இப்படி இருக்க அவருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் இதே நாளில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரை நினைவுகூர்கிறது பில்மிபீட் தமிழ்..


Click it and Unblock the Notifications











