Allu Ramesh: அதிர்ச்சி.. 52 வயதில் திடீர் மாரடைப்பு.. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ் காலமானார்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 52.
டோலிவுட்டில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கி வந்தவர் அல்லு ரமேஷ். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட்டின் நகைச்சுவை நடிகர்: சிருஜாலு படத்தின் மூலம் தெலுங்கில் நடிகராக அறிமுகமான அல்லு ரமேஷ் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலு பொம்மலாட்டா, மதுரா ஒயின்ஸ், வீதி, பிளேட் பாப்ஜி, நெப்போலியன், கெந்திரியா என பல படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக டோலிவுட் சினிமாவில் கலக்கி வந்த அல்லு ரமேஷ் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தது ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகின் சிரிப்பையும் நிறுத்தி உள்ளது.
மாரடைப்பால் மரணம்: சமீப காலமாக பல நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வந்த நிலையில், தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ரமேஷ் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 52 வயதே ஆகும் அல்லு ரமேஷ் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் பலரும் இவ்வளவு சீக்கிரமாக சென்று விட்டாயே என மனவேதனையில் புலம்பி வருகின்றனர்.

கலங்கிப் போன இயக்குநர்: அல்லு ரமேஷ் காலமான செய்தியையே இயக்குநர் ஆனந்த் ரவி தான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் தெரியப்படுத்தினார். அவர் தனது பதிவில் மிகவும் உருக்கமாக முதல் நாளில் இருந்தே எனக்கு பக்க பலமாக இருந்தியே நண்பா, உன் குரல் இன்னமும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அவ்வளவு எளிதாக நான் உன்னை மறந்து விட மாட்டேன். என்னை விட்டு இவ்வளவு விரைவாக நீ பிரிந்து செல்வாய் என நினைக்கவில்லை. எப்போதுமே உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன். உனது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவை பார்த்து பதறிப்போன பல தெலுங்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அல்லு ரமேஷுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











