விஸ்வரூபம் எடுத்த போதைப் பொருள் விவகாரம்: ராணா டகுபதியையும் ரவி தேஜாவையும் வறுத்தெடுத்த போலீசார்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட டாப் 10 பிரபலங்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை அமலாக்கத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
நடிகை சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் புரி ஜெகநாத்தை தொடர்ந்து நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் ரவி தேஜாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

சிக்கும் நடிகர்கள்
நாடு முழுவதும் போதைப் பொருள் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மும்பை, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்திலும் போதைப் பொருள் வழக்கு சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக ஏகப்பட்ட சினிமா பிரபலங்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது அமலாக்கத்துறை.

கோடிக்கணக்கில் பண மோசடி
போதைப் பொருள் விவகாரத்தில் கோடிக் கணக்கில் பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது தொடர்பான பல ஆதாரங்கள் சிக்கிய நிலையில் தான் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி காட்டி உள்ளனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இதில் சிக்கி உள்ளனர்.

சிக்கிய சார்மி
நடிகர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சார்மியும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். நடிகை சார்மியிடம் சுமார் 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2015 முதல் 2017 வரை அவர் ஈட்டிய சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து உள்ளனர்.

ரகுல் ப்ரீத் சிங்குக்கு சிக்கல்
ஏற்கனவே பாலிவுட் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் டோலிவுட் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ளார். சமீபத்தில் விசாரணைக்காக ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ராணா டகுபதியிடம் விசாரணை
டோலிவுட் போதைப் பொருள் விவகாரத்தில் 12 பெரும் புள்ளிகளின் பெயர்கள் சிக்கி உள்ளன. அனைவருக்கும் சம்மன் அனுப்பிய நிலையில், ஒவ்வொரு பிரபலமாக விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். நேற்று பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை கொடுத்தார்.

ரவி தேஜா ஆஜர்
இந்நிலையில், இன்று பிரபல டோலிவுட் நடிகர் ரவி தேஜா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். கடந்த 2017ல் நடந்த போதைப் பொருள் புழக்கம் மற்றும் அதனை அடிப்படையாக கடந்த பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இப்படி பிரபல நடிகர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் கால்வின் உள்பட சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

பலருக்கும் பாதிப்பு
டோலிவுட் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி விசாரணைக்கு ஆஜர் ஆகி வருகின்றனர். இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











