Ponniyin Selvan 2 vs Bahubali 2: பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் டோலிவுட் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படத்தின் கால் தூசி கூட பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் இல்லை என தெலுங்கு சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுடன் சண்டை பிடித்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொன்னியின் செல்வன் 2.
வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆடியோ மற்றும் ட்ரெய்லர்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லரும் நேற்று வெளியானது. டிப்ஸ் தமிழ் சேனலில் சிவோஹம் எனும் பாடல் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆரம்பம் ஆகட்டும் என சொல்லி வெளியிட்டார்.

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் எப்படி
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போலவே பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரிலும் கதை எங்கே இருந்து தொடங்கி எங்கே சென்று முடியப் போகிறது என்பதை விளக்கமாகவே இயக்குநர் மணிரத்னம் கூறியிருக்கிறார். வந்தியத்தேவன், அருள்மொழி வர்மனை ஊமைத்தாய் கடலில் இருந்து காப்பாற்றும் காட்சிகள் தொடங்கி எந்தவொரு சஸ்பென்ஸும் இல்லாமல் ட்ரெய்லர் கட்ஸை உருவாக்கி உள்ளனர்.

பாகுபலி 2வுடன் ஒப்பீடு
பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தாலும், இந்தி மற்றும் தெலுங்கில் அதிகமாக படத்திற்கு அங்கே உள்ள ரசிகர்கள் வரவேற்பு அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரையும் பாகுபலி 2 ட்ரெய்லருடன் ஒப்பிட்டு டோலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கால் தூசு கூட இல்லை
பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் இது சாம்பார் செல்வன் 2 என்றும் பாகுபலி படத்தின் கால் தூசு கூட இந்த ட்ரெய்லர் இல்லை என்றும் மிகவும் மோசமான சமூக வலைதள சண்டைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கு தமிழ் சினிமா ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ராஜமெளலி இல்லைன்னா
பாகுபலிக்கு முன்பும் பாகுபலிக்கு பின்பும் தெலுங்கு சினிமாவில் எந்தவொரு ஹிட்டும் இல்லையே என்றும் இயக்குநர் ராஜமெளலி மட்டும் இல்லைன்னா டோலிவுட்டில் இன்னமும் ரீமேக் படங்களையும் மசாலா படங்களையும் தானே எடுத்துட்டு இருப்பீங்க என தமிழ் சினிமா ரசிகர்களும் டோலிவுட் சினிமா ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர்.

தசராவுக்கு சிக்கல்
பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தெலுங்கு சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2வுக்கு நெகட்டிவிட்டியை பரப்பி வரும் நிலையில், இன்று வெளியாகி உள்ள நானியின் தசரா படத்திற்கு சிக்கல் விளைவிக்கும் வகையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இனிமேல் தெலுங்கு படத்தையே தியேட்டருக்கு போய் பார்க்க மாட்டோம் என பிரச்சனையை பெரிதாக்கி வருகின்றனர். மொழிகளை கடந்து சினிமாவை கொண்டு செல்லும் முயற்சியை சிலர் ஆரம்பித்தாலும், மீண்டும் மொழி, மாநில எல்லை அரசியல் பிரச்சனையை ரசிகர்கள் பெரிதாக்குவது சரியில்லை என்பது பொது ரசிகர்களின் கவலையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











