அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.. தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு ஹீரோ!
டெல்லி: புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 2021ம் ஆண்டுவெளிவந்தது.

இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் போன்றோரும் நடித்துள்ளனர். கலெக்ஷன் ரீதியில் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக புஷ்பா விளங்கியது, விரைவில் இந்த படத்தில் 2வது பாகம் வெளிவர உள்ளது.
69வது தேசிய விருது: கடந்த ஆகஸ்ட் மாதம் 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கும், இயக்குனர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தேசிய விருது என புஷ்பா படம் 3 தேசிய விருதுகளை வென்றது.
சர்ச்சைக்குள்ளான விருது: செம்மரங் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட புஷ்பா படத்தில் ஒரு சமூக விரோதி, கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது சரியானது அல்ல என சச்சையான கருத்துக்களை டோலிவுட் பிரபலங்களே முன்வைத்தனர்.
அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது: இந்நிலையில், தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதற்காக அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியுடன் வந்திருந்தார். விருதை பெற்ற அல்லு அர்ஜூன் இந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, நான் உண்மையிலேயே தாழ்மையும் பெருமையும் அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல் ஹீரோ: இதன் மூலம் தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற வரலாற்று சாதனையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார். 68 ஆண்டுகளில் இதுவரை எந்த தெலுங்கு ஹீரோவும் தேசிய விருதை பெறாத நிலையில் அல்லு அர்ஜூன் இந்த சாதனையை பெற்றிருக்கிறார். இதை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











