"ரஜினி 64".. அசத்தலான 10 திரை வேடங்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் 64 ஆவது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதிலும் அவருடைய ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
சினிமாத் துறையில் ஒரு வில்லனாக நுழைந்து, எல்லார் மனதிலும் அன்றும், இன்றும், என்றும் ஒரு சிறந்த கலைஞனாக, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத ஒரு கதாநாயகனாக திகழ்பவர் ரஜினிகாந்த்.
அப்படி பேர் போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை நினைவுகளை மீண்டும் மனதில் கொண்டுவரும் பத்து முக்கியமான திரை வேடங்களைப் பற்றித்தான் இங்கே இந்த ஜாலி ரிப்போர்ட்.

பில்லா
பில்லா (1980): 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் "டான்" படத்தின் தமிழ் ரீமேக் "பில்லா". பில்லாவில் ஒரு மாஸ் ஆன "மாபியா தலைவன்" பாத்திரத்தில் கலக்கி இருப்பார் ரஜினி. இரட்டை வேடங்களில் ரஜினி நடித்த இப்படம் அவருக்கு முதல் கமர்ஷியல் வெற்றியைத் தந்த படமாகும்.

ஜானி
ஜானி (1980): அதே ஆண்டில் வெளிவந்த மற்றொரு சூப்பர் டூப்பர் ஹிட் "ஜானி"... காற்றில் எந்தன் கீதம் என்ற பாடலைப்போலவே இன்றும் நண்டு, சிண்டுகளில் இருந்து அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தினைப் பிடித்த திரைப்படம். இதிலும் இரட்டை வேடங்களில், ஸ்ரீதேவியுடன் மிக அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி.

தளபதி
தளபதி (1991): நட்பின் பெருமையையே இங்கு பலர் இந்தப் படத்தினைப் பார்த்துதான் தெரிந்து கொண்டு இருப்பார்கள். மணிரத்னத்தின் இயக்கத்தில் கேரளாவின் அருமையான நடிகர் மம்முட்டியுடன் ரஜினி கைகோர்த்த படம் இது. ஒரு குடிசை வாழ் பகுதியில், தாயில் கைவிடப்பட்டு, தாயைப் போல கிடைத்த நண்பனுக்காக எதையும் செய்யத் துணியும் பாத்திரம். மகாபாரத கர்ணன், துரியோதனனின் ஆழமான, உண்மையான நட்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இப்படம் இன்றும் பேசப்படும் ஒரு திரைக்காவியம்.

முத்து (1995):
மீண்டும் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் முத்து. கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படம் முதன்முதலாக ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கு ரீலீசான முதல் தமிழ்ப்படம். அப்போதைய நாட்களிலேயே, கிட்டதட்ட 1.6 மில்லியன் டாலர் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் கொடுத்த படம் மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பான் ரசிகர்களையும் அமைத்து கொடுத்த படம் இது.
இந்த படத்தில்தான் முதல்முதலாக ரஜினிக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாட்ஷா
பாட்ஷா (1995): ஏற்கனவே டான் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரஜினிக்கு மாஸ் அந்தஸ்த்தினை தூக்கி நிறுத்திய படம் பாட்ஷா. ஒரு அமைதியான ஆட்டோ டிரைவரின் குடும்பமும், அவரின் கடந்தகால வாழ்க்கையையும் பற்றிய ஆக்ஷன் படம். இதுவும் அமிதாப்பின் "ஹம்" படத்தின் தழுவல் ஆகும். ரஜினிக்கு சினிமா உலகின் தேவதை என்ற அளவிற்கான வெற்றியைத் தேடித்தந்தது இப்படம்.

படையப்பா
படையப்பா (1999): ஆறுபடையப்பன் என்ற பொறியாளர் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வரும் ரஜினி, என்னவெல்லாம் சோதனைகளை சந்திக்கின்றார் என்பதுதான் படம். செம எனர்ஜியுடன் ரஜினி நடித்த திரைப்படம் இது.
கிட்டதட்ட 275 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், ரஜினிகாந்திற்கு "பாக்ஸ் ஆபீஸ் கிங்" என்ற பெயரினை பெற்றுத் தந்தது. இப்படத்தில் அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடித்திருந்தார் என்பது சிறப்பு.

சந்திரமுகி
சந்திரமுகி (2005): பாபா வசூலில் சோபிக்காமல் துவண்டிருந்த சூப்பர் ஸ்டாருக்கு அதிரடி ஹிட் கொடுத்த படம் "சந்திரமுகி". சரவணன் என்ற மனோதத்துவ நிபுணர் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் சூப்பர் ஸ்டார். மலையாள திரைப்படமான "மணிச்சித்ர தாழ்" படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். 2007 ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது இப்படம். துருக்கி மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி
சிவாஜி (2007): சந்திரமுகி சூடு காய்வதற்குள் வெளிவந்த அடுத்த படம் "சிவாஜி". லண்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் பாக்ஸ் ஆபிசில் வசூலைக் குவித்த பத்து படங்களில் முதல் தமிழ் திரைப்படம் சிவாஜிதான். இப்படத்திற்கு ரஜினிக்கு கிடைத்த சம்பளம் மட்டும் 20 கோடி ரூபாய். ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக ரஜினியை மாற்றிய படம் இது.

எந்திரன்
எந்திரன் (2010): பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் ரஜினி கைகோர்த்த திரைப்படம்தான் எந்திரன். இந்தியாவில் அதிக பொருட் செலவில் தயாரான திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது எந்திரன். விஞ்ஞானம் சார்ந்த இப்படத்தில் வசீகரன் கதாபாத்திரத்தில் விஞ்ஞானியாகவும், எல்லாருக்கும் பிடித்த ரோபோ சிட்டியாகவும் அசத்தலோ அசத்தல் ரஜினி....
சூப்பர் ஸ்டாரின் 10 சிறந்த திரை வேடங்களைப் பார்த்த நாம் இந்த பிறந்தநாளுக்கு ரிலீஸாகி இருக்கும் "லிங்கா" திரைப்படமும் அவரது திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைய நாமும் வாழ்த்துவோம்...!


Click it and Unblock the Notifications











