சூர்யாவை வச்சு செய்த டாப் 5 இயக்குநர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் படுத்ததற்கு காரணமே இவங்க தானா?
சென்னை: விஜய், அஜித்தை விட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா.
விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே ரோலக்ஸாக வந்து மிரட்டிய சூர்யாவை பார்த்து ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களே வாயடைத்து போனார்கள்.
ஆனால், இன்னமும் பாக்ஸ் ஆபிஸில் சூர்யா படங்கள் பெரிய ரெக்கார்ட் வைக்க முடியாமல் போனதற்கு காரணம் அவர் எதிர்பார்த்து நடித்து சொதப்பிய இந்த 5 படங்கள் தான் காரணம் என்கின்றனர். அவை, என்ன என்ன படங்கள் என்றும் அந்த படங்களை சொதப்பிய இயக்குநர்கள் யார் என்றும் இங்கே பார்க்கலாம்..

அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வறீயா
அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வறீயா என ஆர்ஜே பாலாஜி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நானும் ரவுடி தான் படத்தில் கலாய்க்கும் அளவுக்கு அந்த படம் படு தோல்வியை சந்தித்தது சூர்யாவுக்கு பேரிடியாக மாறியது. அஞ்சான் திரைப்படம் பக்காவாக வொர்க்கவுட் ஆகி இருந்தால் சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் அப்போதே 200 கோடியை கடந்து சென்று இருக்கும் என்கின்றனர். இயக்குநர் லிங்குசாமி தனது மொத்த வித்தையையும் இறக்குகிறேன் என சூர்யாவை நல்லா வச்சு செய்து விட்டார் என ஏகப்பட்ட ரசிகர்கள் இயக்குநரை அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் திட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

தானா சேர்ந்த கூட்டம் - விக்னேஷ் சிவன்
சூர்யா படத்தை கலாய்த்து வசனம் வைத்து விட்டு அதே சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்னேஷ் சிவன் படத்தில் ஆர்ஜே பாலாஜியை எல்லாம் வைத்துக் கொண்டு இயக்கிய இந்தி பட ரீமேக் படமான தானா சேர்ந்த கூட்டம் படமும் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை. மற்றவர்களை கலாய்ப்பதை விட்டு விட்டு விக்னேஷ் சிவன் சொடக்கு மேல சொடக்கு போடும் அளவுக்கு சூர்யாவுக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தை பண்ணி இருந்தால் இன்று ஏகே 62 படத்தை கொடுக்க அஜித் யோசித்திருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

என்ஜிகே - செல்வராகவன்
தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் சார் நீங்க தான் சார் தமிழ்நாட்டுக்கே சிஎம் என சொன்னதும் முழு கதையையும் கேட்காமல் சூர்யா ஓகே சொல்லிவிட்டாரா என்னவோ தெரியவில்லை. நல்லா வரும் என காந்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் கிடைச்சது என்னவோ சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா தான்.

எதற்கும் துணிந்தவன் - பாண்டிராஜ்
சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் சூர்யாவின் அசுர நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கர் போட்டி வரை சென்றன. ஆனால், அந்த படங்கள் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றிருக்கும். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் தியேட்டரில் ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் டைட்டிலை பார்த்த உடனே அஞ்சான் ஃபீலிங் வருதே என புலம்பிய ரசிகர்களுக்கு அதே போன்றதொரு அவுட்புட்டை கொடுத்து அவுட் ஆக்கி விட்டார். தம்பி கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் எனும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவராச்சே என நம்பி தலையை விட்ட சூர்யாவுக்கு அந்த பந்தும் சிக்ஸருக்கு போகவில்லை.

வணங்கான் - பாலா
முன்னாடி சொன்ன இயக்குநர்கள் கூட முடியும் வரை முயற்சி செய்து மிஸ் ஆனவர்கள் தான். ஆனால், கடைசியாக படமே இல்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருந்த பாலாவுக்கு சொந்த தயாரிப்பிலேயே ஒரு படம் பண்ணலாம் என முன் வந்த சூர்யாவுக்கு வணங்கான் படத்தை ஆரம்பித்து பாதியிலேயே ஒரே ஓட்டமாக ஓட விடும் அளவுக்கு அப்படி என்ன தான் பாலா செஞ்சாருன்னு கோலிவுட்டே கேட்கும் அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. இப்போ அருண் விஜய் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருப்பது கூடுதல் தகவல்.

சிறுத்தை சிவாவைத் தான் நம்பியிருக்கோம்
3டியில் படம் 10 மொழிகளில் சூர்யா நடிக்கும் ராஜா காலத்து ஸ்டைல் படம் என்ற பில்டப்புடன் தொடங்கி சூர்யா 42 படத்தில் பாலிவுட் ஹீரோயின் திஷா பதானியை எல்லாம் ஜோடியாக போட்டு பிரம்மாண்டமாக படத்தை உருவாக்கி வருகின்றனர். படம் ரிலீசுக்கு முன்பே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரொம்ப பெருசாக போய்க் கொண்டிருப்பது மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் தனது இடத்தை பிடிக்க சூர்யா செய்யும் மாஸ் முயற்சியாகவே தெரிகிறது. ஆனால், சிறுத்தை சிவா ஏதும் செஞ்சுவுட்றாமா பார்த்துக்கணும் என கடைசி வரை சின்ன பயத்துடனே ரசிகர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications