2021ல் குடும்பங்கள் கொண்டாடிய ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் படங்கள்!
சென்னை : காதல் படங்கள் ஆக்சன் படங்கள் என எந்த ஜானர் படங்களாக இருந்தாலும் அதில் ஃபேமிலி ஆடியன்ஸை ரசிக்கும் காட்சிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்
அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ்கின்றனர்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு குடும்பங்கள் கொண்டாடிய சிறந்த 5 ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் திரைப்படங்கள் பற்றி நாம் இங்கு காண்போம்.

மாஸ்டர்
கொரோனா சூழலுக்கு மத்தியிலும் திரையரங்குகள் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு படங்கள் வெளியாவதற்கு பிள்ளையார்சுழி போட்ட திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூலை பெற்று பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டது . தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற பக்கா கமர்சியல் திரைப்படமாக மாஸ்டர் வெளியாகி அனைவரும் குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்த மிகச் சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

உடன்பிறப்பே
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார்,சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான உடன்பிறப்பே அண்ணன் தங்கை பாசத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக கூறியது. ஆபாச காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லாமல் முற்றிலும் குடும்ப ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிகச்சிறந்த ஃபேமிலி சென்டிமெண்ட் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

டாக்டர்
சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அதிலும் டாக்டர் திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனை அதிகம் பேச விடாமல் சாதுவான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. பிரியங்கா மோகன், யோகிபாபு, ராடின் கிங்ஸ்லி,விஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு திரையரங்கில் வெளியாகி மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று ரசித்தனர். 2021 ஆம் ஆண்டு குடும்பங்கள் கொண்டாடிய மிகச் சிறந்த திரைப்படமாக டாக்டர் மாஸ் காட்டியது.

அண்ணாத்தே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி கிராமத்து கதை களத்தில் உருவானது. குஷ்பூ, மீனா ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்க பார்க்கும் அனைவரையும் அண்ணன் தங்கை பாசத்தில் உருக வைத்து குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படமாக அண்ணாத்த உள்ளது.

டிக்கிலோனா
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த முறை மூன்று மடங்கு காமெடியை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் டிக்கிலோனா. அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டைம் டிராவலிங்கை மையபடுத்தி வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் பார்ப்போர் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆபாச காட்சிகள் எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் கண்டு மகிழ கூடிய மிகச் சிறந்த காமெடி திரைப்படமாக டிக்கிலோனா 2021 ஆம் ஆண்டு சிறந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.


Click it and Unblock the Notifications











