ரஜினி முதல் எஸ்கே வரை.. சினிமா பின்னணி இல்லாமல் சோலோவாக தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிய ஹீரோஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி இல்லாமல் சோலோவாக வந்து பட்டைய கிளப்பிய நடிகர்கள் குறித்த ஓர் பார்வை..
தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் பல புதுமுகங்கள் ஹீரோவாக அறிமுகமாகி வருகின்றனர். அவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் சினிமா பின்னணியை கொண்டவர்களாக உள்ளனர்.
ஏற்கனவே சினிமாத்துறையில் ஸ்ட்ராங்கான அடித்தளத்தை கொண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வாரிசுகளாக உள்ளனர்.

சொற்ப நடிகர்கள்
அதே நேரத்தில் சினிமாவின் மீது கொண்ட காதலால் எந்த பின்னணியும் இன்றி போராடி வெற்றி பெற்றவர்களும் உள்ளனர். அப்படி பார்க்கையில் மிக சொற்ப நடிகர்களே சினிமாவில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றுள்ளனர். அவ்வாறு சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து ஜெயித்தவர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

ரஜினிகாந்த்
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்தை பெறுகிறார். இயக்குநர் கே பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ரஜினிகாந்த். இயக்குநர் பாலச்சந்தர் சந்தித்த போது நடிகர் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்தார். தனது வித்தியாசமான ஸ்டைலால் சினிமாத்துறையில் ரசிகர்களை கவர்ந்த அவர், இன்று சூப்பர் ஸ்டாராக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பல கடினமான காலங்களை எதிர்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிலையை அடைந்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த்.

நடிகர் அஜித்
அடுத்த நடிகர் அஜித் ஒரு குறிப்பிடத்தக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், 'என் வீடு என் கணவர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வசந்த் இயக்கிய 'ஆசை' என்ற திரில்லர் படத்தினால் அஜித் பிரபலமானார். அஜித் தனது சினிமாவில் சில குறிப்பிட்ட படங்களை வழங்கி தன்னை ஒரு மாஸான நடிகராக வளர்த்துக் கொண்டார். மேலும் அவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதிய பாணியை பின்வற்றி வருகிறார். நடிகர் அஜித் தனது வயதை கேமராவுக்கு முன்னால் மறைக்க ஒருபோதும் தயங்கியதில்லை. முடிக்கு கலரிங் கூட செய்யாமல் சால்ட் அன்ட் பெப்பர் என்ற ஹேர் ஸ்டைலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவரே நடிகர் அஜித்தான் என்று கூறும் அளவுக்கு அவரது கெட்டப் பிரபலமானது.

நடிகர் சந்தானம்
அடுத்து நடிகர் சந்தானம்.. நடிகர் சந்தானம் ஏராளமான குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து சிம்புவின் மன்மதன் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார் சந்தானம். அந்தப் படத்தில் அவரது டைமிங் டயலாக்குகள் ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து சந்தானம் நகைச்சுவை நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாவும் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி
அடுத்து விஜய் சேதுபதி.. நடிகர் விஜய் சேதுபதி பல போராட்டங்களுக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஹீரோவாக அறிமுகம் ஆகும் முன்பே பல படங்களில் துணை நடிகராக வலம் வந்துள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கிரெடிட் இல்லாத பல படங்களில் நடித்துள்ளார். துணை நடிகர், தொலைக்காட்சி சீரியல் என கிடைத்த ரோல்களையெல்லாம் செய்து தன்னை வளர்த்துக் கொண்ட விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் லீடிங் ரோலில் முதன் முதலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்
அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன்.. நடிகர் சிவகார்த்திகேயன் தனது கல்லூரி நாட்களில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பின்னர் விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தனது தனித்துவமான ஸ்டைலின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள். தொடர்ந்து மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்ஷன் என அசத்தி வரும் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.


Click it and Unblock the Notifications











