சின்ன படங்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்.. படம் ஓடினால் என்ன.. ஓடலன்னா என்ன? கோலிவுட்டில் புகைச்சல்!
சென்னை: கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகரின் சமீபத்திய நடவடிக்கை, சிறிய பட தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நடிகரின் படம் வெளியாகும் என்றாலே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுப்பது வழக்கம். அதனால், அவரது படத்துடன் நேரடியாக மோதுவதை பலரும் தவிர்ப்பார்கள். ஆனால், இந்த முறை நடந்த சம்பவம் வேறு மாதிரி இருக்கிறதாம்.
ஏற்கனவே பல சிறிய படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அறிவித்து, ஊர் ஊராக சென்று புரமோஷன் செய்து, மக்களை நேரில் சந்தித்து, "எங்கள் படத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டிருந்த சூழலில், திடீரென பெரிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதாம். அதுவும் மிகக் குறுகிய இடைவெளியில்.
இதனால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த வெளியீட்டை மாற்ற முடியாமல் பல சிறிய படங்கள் ஒரே வாரத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல், காட்சிகள் குறைவதும், ரசிகர்களின் கவனம் முழுவதும் அந்த பெரிய படத்தின் பக்கம் திரும்பியதும், பலரையும் கவலையடையச் செய்திருக்கிறதாம்.

கஷ்டம்: இதுபற்றி கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுவது இன்னும் சுவாரஸ்யம். "அந்த நடிகரின் படம் எப்போது வந்தாலும் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். அவருடைய பெயரே பெரிய விளம்பரம். ஒரு மாதம் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தால், மற்ற படங்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் தேதி அறிவிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது யார்? பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு படம் எடுத்த சின்ன தயாரிப்பாளர்கள்தான்" என்று சிலர் ஆதங்கப்படுகிறார்களாம்.
வாழ்க்கை: இதில் இன்னொரு கருத்தும் கோலிவுட்டில் அடிபடுகிறது. "பெரிய படங்களுக்கு வசூல் பற்றிய பயமே கிடையாது. ஆனால், ஒரு சிறிய படத்தின் முதல் மூன்று நாட்கள்தான் அதன் வாழ்க்கையை முடிவு செய்யும். அந்த மூன்று நாட்களையே பறித்துவிட்டால், அந்தப் படத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இதைப் பற்றி யோசிக்க வேண்டிய பொறுப்பு முன்னணி நட்சத்திரங்களுக்கும் இருக்க வேண்டாமா?" என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்களாம்.
கோலிவுட்டில்: இது வெறும் ரிலீஸ் தேதியைப் பற்றிய விவகாரம் மட்டுமல்ல. பெரிய நட்சத்திரங்களும், சிறிய படங்களும் இணைந்து வாழ வேண்டிய தமிழ் சினிமா சூழலில், இப்படியான கடைசி நேர முடிவுகள் தொடர்ந்து நடந்தால், பாதிக்கப்படுவது புதிய தயாரிப்பாளர்களும், அறிமுக இயக்குநர்களும், வளர்ந்து வரும் நடிகர்களும்தான் என்று திரையுலகில் மெல்லிய புகைச்சல் கிளம்பியிருக்கிறதாம். "படம் ஓடினால் என்ன... ஓடவில்லை என்றால் என்ன... ஆனால், சின்ன படங்களுக்கும் கொஞ்சம் இடம் விட்டுக் கொடுத்திருக்கலாமே!" என்பதே தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படும் பேச்சாக இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications