சூப்பர் ஸ்டார் 12.12.12... குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்!
உலகில் வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காத ஒரு அபூர்வ பிறந்த தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாய்த்திருக்கிறது. இந்தத் தேதி வாய்த்தது முக்கியமல்ல... அது திரையுலகின் உச்சநட்சத்திரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினிக்கு வாய்த்ததுதான் முக்கியமானது.

கொண்டாடும் உலகம்
ரஜினியும் அவரது குடும்பத்தினரும் வேண்டுமானால் இந்த பிறந்த நாளை இன்று நள்ளிரவிலிருந்தோ, நாளை காலையிலிருந்தோ கொண்டாடலாம். ஆனால் உலகம்... டிசம்பர் முதல் தேதியிலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது.
இதைப் படிக்கும்போது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் அது முழுமையான உண்மை.

ரசிகர்கள்...
டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள ரஜினியின் ரசிகர்கள் பல நல்ல காரியங்களை, நலத் திட்டங்களை தங்களால் முடிந்த அளவு செய்து வருகின்றனர். இலவச உடைகள் வழங்குகள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்களுக்கு நிதியுதவி, பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி, ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைத்தல் என ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 10 தினங்களாக கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுகின்றன.

மதுரையில் எங்கும் ரஜினிமயம்
ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு பிரதான இடம் மதுரைக்கு என்றால் மிகையல்ல. அப்படி ஒரு தடபுடல் ஏற்பாடுகளை அந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கடந்த 10 தினங்களாக நாளொரு பேனர், போஸ்டர், கட் அவுட்டுகள். மதுரை மாநகரின் கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோக்களிலும் ரஜினி அட்டகாசமாக சிரித்தபடி உலா வருகிறார்!

திருச்சி...
திருச்சியை ரஜினி ரசிகர்களின் கோட்டை என்பார்கள். ஆண்டுதோறும் ரஜினி பிறந்த மாதம் முழுக்க திருவிழாவாகத்தான் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அலகு குத்துதல், தேரிழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், பேரணி நடத்துதல் என நாளொரு அமர்க்களம் அரங்கேறும். இந்த ஆண்டு கேட்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு திருச்சி முழுக்க ரஜினி முத்திரையை பதித்து வைத்துள்ளனர்.
நலத்திட்ட உதவிகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக ஆதரவற்ற, மனநலம் குன்றிய மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தினசரி உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில்...
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, சென்னையில் ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமான பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

குவியும் வாழ்த்துகள்...
ரஜினியின் இந்தப் பிறந்தநாளில் அவருக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒருநாள் முன்பாகவே அவருக்கு மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், கனடா, அமெரிக்காவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அந்தந்த நாட்டு அரசுகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











