Sasikumar: நம்பிக்கை நாயகனாக மாறி வரும் சசிகுமார்.. பாலாவின் பட்டறைனா சும்மாவா?
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சசிகுமார். தற்போது நடிகராக உயர்ந்து நிற்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், எல்லா படங்களிலும் ஏதாவது டேக் - அவே இருக்கிறது என்று கூறும் அளவுக்கு சசிகுமார் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை உருவாக்கி வருகிறார். சசிகுமார் நடிப்பில் நாளை அதாவது, மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அஸ்வின் பாலா எனும் இணையவாசி, தனது எக்ஸ் பக்கத்தில் சசிகுமாரின் மொத்த சினிமா வாழ்க்கையையும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பதிவிட்டுள்ளார். சசிகுமார் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், " சினிமாவில் இயக்குநர் ஆக விரும்பிய சசிகுமார் முதலில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேது படத்தில் 1999 ஆண்டு பணியாற்றினார். அதே போல் அமீர் அவர்களிடம் 2008 ஆண்டு வரை பருத்திவீரன் படம் வரை பணியாற்றினார். சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அந்த படத்தில் விக்ரம் நண்பராக ஒரு சில காட்சிகளும் சசி நடித்தார். குறிப்பாக ஆட்கள் பற்றாக்குறையால் படத்தின் இறுதிக் காட்சியில் மொட்டை ஆட்களில் ஒருவராக நடித்ததாகவும் சசி ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சசி அச்சமயத்தில் ஒரு புறம் சுப்ரமணியபுரம் படத்தின் கதையையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். பருத்திவீரன் படம் சில காரணங்களால் தாமதமாக உடனடியாக தனது பட வேலைகளை தொடங்க பருத்திவீரன் படத்திலிருந்து விலகினார். முழு மூச்சாக தனது முதல் படத்திற்காக களத்தில் இறங்கி பல சம்பவங்களை சேகரித்தார். 80 களின் மதுரையை நம் கண் முன்னே கொண்டு வர பெரிய பாடுபட்டார் சசி. அந்த உழைப்பின் வெற்றியே "சுப்பிரமணியபுரம்" கல்ட் படமாக உயர்ந்து நிற்க காரணம். சுப்ரமணியபுரம் படத்தில் சில பல நிராகரிப்பு பின் ஜெய் உள்ளே வந்தார். ஆனால் பரமன் வேடத்தில் நடிப்பது யார் யாருக்குமே சொல்லவில்லை. பட காட்சிகள் படமாக்கும் போது தான் இயக்குநர் சசியே அந்த வேடத்தில் நடிப்பது படக்குழுவுக்கு தெரிய வந்தது.

நட்பின் இலக்கணம்: முதல் படத்திலே இயக்குநராக நடிகராக ஜெயித்த சசி அடுத்தடுத்து படங்கள் இயக்குவார் என நினைக்க, 3 தோல்வி படங்களை கொடுத்த இயக்குநர் சமுத்திரக்கனி அவர்களுக்கு தோள் கொடுத்து நடித்த படம் "நாடோடிகள்". நடிகராக தனது நண்பருக்காக நடித்த "நாடோடிகள்" இயக்குநராக சமுத்திரக்கனி அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படம் பாடல்கள் என பட்டி தொட்டி எங்கும் ஹிட். சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
மீண்டும் இயக்கம்: 2010 ஆண்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சசி இயக்கிய இரண்டாவது படம் "ஈசன்". வைபவ் , சமுத்திரக்கனி நடித்த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் செம ஹிட். இதுவரை சசி இயக்கிய கடைசி படம் இந்த ஈசன் தான். 2011 ஆண்டு சசியே தயாரித்து நடித்த படம் "போராளி". இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லை. சில மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. போராளியை தொடர்ந்து 2012 ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் சசி நடித்த படம் "சுந்தரபாண்டியன்".. படம் மிகப்பெரிய வெற்றி. அதை தொடர்ந்து நடித்த குட்டிப்புலி படமும் நல்ல வெற்றியைப் பெற முழு நேர நடிகரானார் சசி.

கனவு படம்: வெற்றி தோல்வியை மாறி மாறி கொடுத்தாலும் பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக வெற்றிவேல் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்று.ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் சசி . குறிப்பாக பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நண்பராக நடித்தார் சசி. வேல் ராமமூர்த்தி எழுதிய பிரபல நாவல் "குற்றப்பரம்பரை". இதை படமாக்க நீண்ட நாட்களாக சசிகுமார் முயற்சி செய்து வருகிறார். மறுபுறம் பாரதிராஜாவும் முயற்சி செய்ய பல சிக்கல்களால் அப்படியே நிற்கிறது. படமாக வந்தால் நன்றாக இருக்கும். சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் அயோத்தி படம் போல் சசி அவர்களுக்கு நல்ல படமாக அமைய வாழ்த்துகள் " என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சசிகுமார் தொடர்ந்து இதோபோல படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











