Tourist Family Blue Sattai Maran Review: பாராட்டுகள் குவித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. ப்ளூ சட்டை மாறன் போட்ட மார்க்
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு, பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் டூரிஸ்ட் ஃபேமிலி. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவித்து வருகிறது. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன், இந்த படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் ராமேஸ்வரம் பகுதியில் இலங்கையில் இருந்து ஒரு குடும்பம் வந்து இறங்குகிறது. அவர்கள் எதனால் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள் என்றால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னையால், அங்கு விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்டது. அந்த விலைவாசியைக் கொடுத்து அங்கு வாழ முடியாது என்பதால் இந்தியாவுக்கு கிளம்பி வந்துள்ளார்கள்.
இந்த குடும்பம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், அவர்களிடத்தில் இந்தியர்கள் என்ற அடையாளம் எதுவும் இல்லை. எனவே போலியான அடையாள ஆவணங்கள் உருவாக்கிக் கொண்டு இங்கு வாழ்கிறார்கள். இதனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். இந்த நிம்மதிக்கு வேட்டு வைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

தைரியம்: இந்த படம் பார்த்ததும் நமக்குத் தோன்றியது ஒன்றுதான். அயோத்தி படம் கொடுத்த வெற்றியும் தைரியமும் தான் இந்த படத்தில் நடிக்க சசிகுமார் முடிவெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. ஏறக்குறைய ஒரு ஃபீல் குட் படமாகத்தான் இந்த படத்தையும் உருவாக்கியுள்ளார்கள். அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால், அந்த படத்தில் எல்லாம் தேவையாக இருக்கும். ஆனால் இந்த கதையில் அவர்கள் இலங்கையில் இருந்து வருவதற்கே வலுவான காரணங்கள் கிடையாது. பொருளாதார பிரச்னைக்காக இங்கு வந்து அகதியாக இருக்க வேண்டும் என்பது பெரிய காரணமாக தெரியவில்லை. போர் காலங்களில் வந்திருந்தால் அங்கு அது உயிர் பிரச்னை.
திரைக்கதை: இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சாதாரணமாக இவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. வீடு கிடைத்துவிடுகிறது. குழந்தைகளுக்கு பள்ளியில் சீட் கிடைத்து விடுகிறது. அவர்கள் போலீஸ் அதிகாரி வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் அந்த போலீஸைப் பார்த்தால் பயம் வரவேண்டும் இல்லையா? ஆனால் அவர் சிரிப்பு போலீஸ். அவர் எப்படி கண்டுபிடிப்பார். அதுபோல படம் ஒரு கிரிப் இல்லாமல் போய்க்கொண்டு உள்ளது.
பாராட்டு: இந்த படத்தின் திரைக்கதை வேண்டும் என்பதற்கு ஏற்ற வகையில் வளைத்துள்ளார்கள். நெஞ்சை நக்குவது போல நான்கு காட்சிகள் உள்ளது. படத்தின் பல காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. படத்தில் நல்ல விஷயம் என்று எடுத்துக் கொண்டால், இலங்கை தமிழ். அது அனைவருக்கும் புரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் பலரும் இந்த படத்தில் அதை சிறப்பாக கையாண்டு நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். அவை நன்றாக உள்ளது.

மொத்தத்தில் படம்: படத்தில் பல காட்சிகள் மிகவும் நீண்ட காட்சிகளாக உள்ளது. அதேபோல் பல காட்சிகள் நன்றாகவே ஒர்க் - அவுட் ஆகியுள்ளது. முழுக்கதையுமே இயல்பை மீறி இருப்பதால், நம்மால் இந்த படத்தில் ஒன்ற முடியவில்லை. படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுத்திருந்தால் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்திருக்க முடியும். இப்போது இந்த படம் நாடகம் போல் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











