Abishan Jeevinth: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு டும் டும் டும்.. காதலிக்கு தாலி கட்டிய அபிஷன் ஜீவிந்த்!
சென்னை: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவுக்கு தாலி கட்டி தனது திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் திறமை வாய்ந்த புதுமுக இயக்குநர்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். இயக்குநர்கள் ஒரு படத்தை முடித்து விட்டு ஹீரோவாகும் நிலையும் சமீப காலமாக அதிகம் நடந்துக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

அப்படி இந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் அபிஷன் ஜீவிந்த். அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் திருமணம்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை குறைவான பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்துவிட்டு அடுத்ததாக செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாகவும் நடித்து முடித்துள்ள அபிஷன் ஜீவிந்த் தனது காதலி அகிலாவை இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டார்.
பிரபலங்கள் வாழ்த்து மழை: முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
ஹீரோ அவதாரம்: இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் ஹிட் கொடுத்த நிலையில், விரைவில் ஹீரோவாக அவர் அனஸ்வரா ராஜன் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படமும் வெளியாகி அடுத்த பிரதீப் ரங்கநாதன் போல அபிஷன் ஜீவிந்தையும் தமிழ் சினிமா மாற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மணமக்களுக்கு ரசிகர்கள் தங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











