Tourist Family Public Review: சசி சார் படம் நல்லா இருக்கு.. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு குவியும் பாராட்டுகள்!
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் , யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று அதாவது மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
படம் குறித்து ரசிகர் ஒருவரு கூறும்போது, " குடும்பத்துடன் பார்க்க மிகவும் சரியான படம். அனைத்து விதமான வயதுடைய ரசிகர்களுக்கும் ஏற்றவாறு கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் ஜாலியாக சென்றாலும் படத்தில் இருக்கும் எமோஷன்ஸ் நம்முடன் நேரடியாக கனெக்ட் ஆவதால், ஒரு திருப்திகரமான படமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரசிகை ஒருவர் கூறும்போது, " படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை மிகவும் ஜாலியாக சென்றது. கடைசியாக இருந்த எமோஷனல் காட்சி மிகவும் நன்றாக இருந்தது. ஒரு ஃபீல் குட் படம் பார்த்ததைப் போல உள்ளது. குட்டி பையன் ( கமலேஷ் ஜெகன்) சூப்பரா நடித்துள்ளார். இயக்குநருக்கு இது முதல் படம் போலத் தெரியவில்லை. சிம்ரன் - சசிகுமார் காம்போ நன்றாக ஒர்க் ஆகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

குறையே இல்லை: அதேபோல் மற்றொரு ரசிகை கூறும்போது, " படத்தில் குறை எனக் கூறும் அளவுக்கு எதுவும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் குடும்ப கதை சிறப்பாக உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு அவர்களின் பெஸ்ட்டைக் கொடுத்துள்ளார்கள். ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துடன் டிராவல் ஆவதால் மிகவும் சூப்பராக உள்ளது. இந்த படத்தை யாரும் மிஸ் செய்யக்கூடாது. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். நெருக்கமானவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும். இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும், இந்த படம் உங்களை அழ வைக்கும், இந்த படம் உங்களை நெகிழ்ச்சி அடையச் செய்யும். மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இந்த படம் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இசை: மற்றொரு ரசிகர் கூறும்போது, " படத்தின் இயக்குநர் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சி தனியாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சொந்த ஊரை விட்டு மற்றொரு ஊரில் குடும்பத்துடனோ, தனியாகவோ இருக்கும் அனைவருக்கும் இந்த படம் மிகவும் நெருக்கமானதாக இருக்கும். படத்தின் பின்னணி இசை படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. திரைக்கதை, கேமரா ஒர்க் என படத்தின் ஒட்டுமொத்த குழுவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சசிகுமார்: ஒட்டுமொத்த படக்குழு தாம்பரத்தில் உள்ள தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களிடம் விமர்சனத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அப்போது ரசிகர்கள் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார்கள். குறிப்பாக சசிகுமாரின் கதை தேர்வும், அவரது படங்களும் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், அவருக்காகவே வந்து படங்களைப் பார்ப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











