Manjummel boys: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் பிரபலம், குணா குகையை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்!
சென்னை: மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் படம். கடந்த மாதம் 22ஆம் தேதி இந்த படம் தமிழகத்தில் 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான நிலையில், படத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இரு தினங்களில் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை 250ஆக அதிகரிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது, இந்தப் படம் சில தினங்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது,
இந்த படத்தை கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர், படத்தின் மவுசு அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது, நாயகியே இல்லாமல் சில நண்பர்களை மட்டுமே கேரக்டர்களாக கொண்டு ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடியும் என்பதை இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார், இந்த படத்தின் ஹைலைட் குணா குகை மற்றும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடல். இவை இரண்டுமே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: மஞ்சுமெல் பாய்ஸ் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீசானது. இந்தப்படம் மலையாளத்தை விட தமிழில் மிக அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது, படத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல்ஹாசனின் குணா படத்தின் கண்மணி அன்போடு என்ற பாடல் மட்டுமில்லாமல் குணா குகையையும் சிறப்பான வகையில் பயன்படுத்தி உள்ளனர். சர்வைவல் திரில்லராக வெளியாகி உள்ள இந்தப் படத்தில் நாயகியே இல்லாமல் சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் படத்தின் இயக்குனர் சிதம்பரம், இந்தப் படம் கடந்த மாதம் 22ம் தேதி 50 திரையரங்குகளில் ரிலீசானது.
அதிகரிக்கப்பட்ட திரையரங்குகள்: தொடர்ந்து இரண்டே நாட்களில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கான வரவேற்பு அதிகரித்த நிலையில் 250 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக போஸ்டர்கள், பிரஸ்மீட், பிரிமியர் ஷோ என எதையும் செய்யாமல் வெறும் ரசிகர்களின் பாராட்டுக்கள் மூலமாகவே இதை படக்குழுவினர் சாத்தியப்படுத்தியுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயை தாண்டி உள்ளது. தமிழில் கமல்ஹாசன் மற்றும் குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர், மேலும் வெளிநாட்டிலிருந்து நடிகர் சிம்புவும் தொலைபேசி மூலம் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்,

100 கோடி கிளப்பில் மஞ்சுமெல் பாய்ஸ்: மலையாளத்தில் எப்பொழுதுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படங்கள் உருவாகி ரிலீசாகும். ஆனால் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது, சில படங்களே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன, அந்த வகையில் முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் வெளியான புலிமுருகன், 2019ம் ஆண்டில் லூசிபர், 2023ம் ஆண்டில் வெளியான 2018 மூவி ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தன. அந்த வரிசையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படம் நூறு கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டில் வெளியான 2018 மூவி படம் 180 கோடி ரூபாயை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குணா குகைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்: தற்போது தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரளாவிலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக ஓடி வரும் சூழலில், இன்னும் சில தினங்களில் இந்த வசூல் சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே 30 ஆண்டுகளுக்கு முன்பு குணா படத்தில் பயன்படுத்தப்பட்ட குணா குகை இந்தப் படத்தின்மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இந்த குகை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குகையை பார்க்க தற்போது ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்த இடத்தில் நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











