வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ
Recommended Video

திருச்சூர்: நடிகர் டொவினோ தாமஸ் தனது வீட்டை நிவாரண முகாமாக மாற்றியதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் உதவி வருகிறார்.
நடிகர் டொவினோ தாமஸ் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தில் தான் வில்லன், நிஜத்தில் அவர் ஹீரோவாக உள்ளார். அதிலும் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அவர் ஹீரோ.
டொவினோ தாமஸின் வீடு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ளது. வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு உதவி வருகிறார் டொவினோ.

டொவினோ
இரிஞ்சாலக்குடாவில் உள்ள தனது வீட்டையே டொவினோ நிவாரண முகாமாக மாற்றியுள்ளார். வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தன் வீட்டில் வந்து தங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உண்மையாகவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக தனது வீட்டின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக டொவினோ கூறியுள்ளார்.

உதவி
நிலைமை சீராகும் வரை தனது வீட்டில் தங்க வருவோரின் தேவைகளை பார்த்துக் கொள்வதகாவும் டொவினோ வாக்குறுதி அளித்துள்ளார். இது தவிர நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான தொடர்பு எண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அடம்
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தாலும் வெளியேற மறுக்கிறார்கள் சிலர். மீட்பு படையினர் வந்து அழைத்தாலும் வீட்டை விட்டு வெளியேற யோசிக்கிறார்கள். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் இருப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்று அவர்களுக்கு புரியவில்லை. இதனால் மீட்பு படையினரின் பணி கடினமாகியுள்ளது.
வேண்டுகோள்
மழை நின்று வெள்ள நீரின் அளவு குறைந்தாலும் சில பகுதிகளில் தற்போதும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. அதனால் வெள்ள நீர் புகுந்த வீடுகளில் இருந்து கொண்டு வெளியே வர மறுப்பவர்களுக்காக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் டொவினோ. தயவு செய்து வீடுகளை விட்டு வெளியே வாருங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











