தயாரிப்பாளர் ஜின்னா கடத்தல்-சென்னை இன்ஸ்பெக்டரை விசாரிக்க உத்தரவு
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்க நிர்வாகியுமான ஜின்னாவை அடித்து, காரில் தூக்கிப் போட்டு சென்னைக்குக் கடத்திச் சென்ற போலீஸாரிடம் விசாரணை நடத்துமாறு டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ஜின்னா. பரத், பூனம் பாஜ்வா நடித்த சேவல் படத்தைத் தயாரித்தவர். பல படங்களை விநியோகித்த விநியோகஸ்தரும் ஆவார். திருச்சி மாவட்ட விநியோகஸ்தர் சங்க துணைத் தலைவராக இருக்கிறார்.
கடந்த 2ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இவரை ஒருகாரில் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தது ஒரு கும்பல். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜின்னாவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜின்னாவே மீண்டு வந்தார். அவர் கூறுகையில், தன்னை காரில் கடத்திச் சென்றது சென்னை விருகம்பாக்கம் போலீஸார் ஆவர் என்று கூறி பரபரப்பை அதிகப்படுத்தினார்.
ஜின்னா மீது வடபழனியைச் சேர்ந்த ராஜு என்ற வட்டிக்கடைக்காரர் கொடுத்த புகார் காரணமாக போலீஸார்தான் விசாரணைக்காக இப்படி முரட்டுத்தனமாக அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
சென்னை போலீஸார் ஜின்னாவை விசாரணைக்காக அழைத்துச் சென்ற விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்த டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications