Leo Release - லியோ படத்தை திரையிட முடியாது.. தியேட்டர் எடுத்த அதிரடி முடிவு.. இதுதான் காரணமா?
திருச்சி: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ திரைப்படத்தை திரையிட முடியாது என்று திருச்சி சாந்தி சினிமாஸ் அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கிறது லியோ திரைப்படம். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கின. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் அதிகம் வைத்திருக்கின்றனர். எப்படியும் தங்களது எதிர்பார்ப்பை லோகேஷ் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

லியோ பஞ்சாயத்து: படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஜோராக நடைபெற்று வந்தாலும் சிறப்பு காட்சி தொடர்பான பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லை. சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கினாலும் அந்தக் காட்சியை காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என கூறியது. துணிவு படத்தின் சிறப்பு காட்சியில் நிகழ்ந்த விபத்துதான் இதற்கு முழு காரணம் என கருதப்படுக்கிறது.
விடாத படக்குழு: ஆனால் அதிகாலை காட்சிதான் தங்களுக்கு வேண்டும் என்பதில் படக்குழு பிடிவாதமாக இருந்தது. அதன் காரணமாக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கும் சென்றது. ஆனால் நீதிமன்றமோ அதிகாலை காட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துவிட்டது.
புதிய பிரச்னை: சூழல் இப்படி இருக்க புதிய பிரச்னையாக இன்னொன்று முளைத்திருக்கிறது. அதாவது லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்கிறது. இதனையடுத்து தயாரிப்பு தரப்பு தியேட்டர்களிடம் 80 சதவீதம் பங்கு தொகை கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பல திரையரங்கங்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றன.
திரையிடமாட்டோம்: மேலும் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும், இந்த விவகாரத்தால் லியோ திரைப்படத்தை திரையிடுவதில் சிக்கல் நிலவுகிறது என்று இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி சாந்தி சினிமாஸ் லியோ திரைப்படத்தை திரையிட முடியாது என்று முடிவெடுத்திருக்கிறது. சில காரணங்களால் லியோ திரைப்படத்தை சாந்தி சினிமாஸில் திரையிட முடியவில்லை என்று அந்த தியேட்டர் நிர்வாகமும் அறிவித்திருக்கிறது.
இதுதான் காரணமா?: தியேட்டரின் இந்த முடிவுக்கு 80 சதவீத பங்கு தொகையை பட தயாரிப்பு நிறுவனம் கேட்பதுதான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஷாக் அடைந்திருக்கின்றனர். மேலும் விஜய்க்கு எத்தனை சிக்கல்தான்ப்பா வரும் எனவும் அவர்கள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











