twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட இந்நாத விஷயத்துல நாமும் ஹாலிவுட் ரேஞ்ச்தான்!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒரே பொருளில் அமைந்த கதைகளின் தொடர்வரிசைத் திரைப்படங்களை மேலை நாட்டினர் ஓயாது எடுத்து வெளியிடுகின்றனர். முதற்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பாக மாறி நின்றமையால் அத்தகைய படங்கள் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டன. படத்தின் மையக்கருத்தும் இடைப்பாடுகளும் முடிவும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்த அப்படங்கள் ஒருபோதும் பார்வையாளர்களை ஏமாற்றியதில்லை. ஒன்றையொன்று விஞ்சும் விதமாகவே வெற்றிகளைக் குவித்தன. அவை தேர்ந்த தரமொழியாளர்களின் (விமர்சகர்கள்) பாராட்டுகளையும் பெறத் தவறவில்லை.

    டாலர் முப்படங்கள் என்று 'பார் அ பியூ டாலர்ஸ் மோர்', 'தி குட் பேட் அக்ளி', 'எ பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்' ஆகிய படங்களைக் குறிப்பிடுவார்கள். இம்மூன்று படங்களையும் இயக்கியவர் செர்ஜியோ லியோனே. இம்மூன்றிலும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் நாயக வேடத்தைத் தாங்கியிருந்தார். 'ஒருபொருள் மும்மை' வகைப் படங்களின் வரிசையில் தலையாய இடத்தை இப்படங்கள் பிடித்திருக்கின்றன. இம்மூன்றிலும் பணத்தையோ தங்கத்தையோ தேடியலைவது, கொள்ளைக் கூட்டம், குறி தவறாத துப்பாக்கிச் சூடு, குதிரைக் குளம்போசை, புழுதி மண் என்று ஒரேவகையான படப்பொருள்களைக் காணலாம். மூன்றில் எது சிறந்தது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளுமளவுக்கு அவற்றின் படமாக்கம் இருக்கும். மேலை நாட்டுத் திரைப்படப் பட்டியலில் இத்தகைய மும்மைகள் (Triolgy) பலப்பல இருக்கின்றன. ஸ்டார் வார்ஸ், காட் பாதர், மேட்ரிக்ஸ், தி லார்ட் ஆப் தி ரிங்ஸ், டெர்மினேட்டர், இண்டியான ஜோன்ஸ், அலியன்ஸ், ஸ்பைடர்மேன், பேட்மேன், மேட் மேக்ஸ், ஜுராசிக் பார்க் என ஒரு பொருளிலமைந்த தொடர் படங்களின் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.

    Triologies in Tamil cinema

    தமிழில் இவ்வாறு 'ஒருபொருள் தொடர் வரிசையில்' படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா ? இல்லை என்று முற்றாகச் சொல்ல முடியாது. ஆனால், பெரும்பாலும் ஒரே பொருளை நடுப்படுத்தி ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முற்படத்திற்கும் பிற்படத்திற்கும் இடையிலான பேசுபொருள் ஒற்றுமையை நன்றாகவே இனங்காண முடியும். ஆனால், நடிகரோ இயக்குநரோ தயாரிப்பாளரோ வெவ்வேறானவராக இருப்பார். அது மட்டுமின்றி ஒரு படம் முந்திய படத்தைப் போன்றது என்ற அடையாளத்தைத் தமிழ்த் திரையுலகம் முடிந்தவரை மறைக்கவே பார்த்தது.

    தமிழ்த் திரைப்படங்கள் பலவும் முழுக்க முழுக்க இவ்வாறு ஒரே பொருளை மையமாகக்கொண்டு தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை வகைப்படுத்தி ஒப்பிட்டு வரையறுக்கும் பணியை எந்தத் தரமொழியாளருமே செய்யவில்லை எனலாம். எண்ணிப் பாருங்கள்... இராஜகுமாரி, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, அரசிளங்குமரி ஆகிய படங்களை ஒரே வகைமையின்கீழ் அடக்கலாம். இவற்றில் ஒன்றையொன்று விஞ்சுவது எது என்று திறம்பட ஆராயலாம். ஆனால், நம்முடைய 'திரை விமர்சகர்கள்' எனப்படும் தரமொழியாளர்கள் தாம் எடுத்துக்கொண்ட ஒற்றைப் படத்திற்கு அப்பால் துளியளவும் சிந்திப்பதில்லை. மீறிப்போனால் அதைப்போலவே இருக்கிறது, அதைவிட இது நன்றாக இருக்கிறது என்கின்ற மட்டத்தில் மேலோட்டமான சொற்களோடு நிறுத்திக்கொண்டார்கள். நம் இதழ்கள் பலவும் திரைப்படங்களைப் பற்றி எழுதியே காலங்கடத்தின. ஆனால், திறமையான ஒப்பீட்டு ஆய்வுகள், வகைப்படுத்தல்கள், விளக்கக் கட்டுரைகள் என்று கொஞ்சமேனும் மேல்நகர்ந்து எதையேனும் செய்தார்களா என்றால் இல்லவே இல்லை.

    Triologies in Tamil cinema

    போனது போகட்டும். நாம் என்னென்ன படங்களை இவ்வரிசையில் அடக்கலாம் என்று பார்ப்போம். மேற்சொன்ன படங்களை 'அரசிப் படங்களின் வரிசை' என்று அடுக்கலாம். அவ்வரிசை அப்படங்களோடு நிற்பதில்லை. மேலும் தொடரும். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன் ஆகிய படங்களை 'இஸ்லாத்துத் தொல்கதை' வரிசையில் அடுக்கலாம்.

    தாய்க்குப்பின் தாரம், தாயைக் காத்த தனயன், தாய்சொல்லைத் தட்டாதே ஆகிய படங்களை தாய்வரிசைப் படங்களாக அடுக்கலாம். இவ்வாறு ஒரு பட்டியலை உருவாக்கிப் பார்க்கும்போதுதான் தொடர்ச்சியான கதைப்பொருள்களில் நடித்தவராக எம்ஜிஆரையே இனங்காண வாய்க்கிறது. எது வெற்றி பெறுகிறதோ அதைவிட்டு விலகாதபடி தம் அடுத்தடுத்த படங்களை ஆக்குவதில் அவர் குறியாக இருந்திருக்கின்றார்.

    சிவாஜி கணேசன் நடித்த படங்களிலும் ஒரு பொருளிலமைந்த பல படங்களை நிறையவே காணலாம். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகியவை ஒரு தொடர்வரிசை. பீம்சிங் இயக்கிய பகர வரிசைப் படங்களை ஒரே தொடர் வரிசைக்குள் அடக்குவதும் இயல்வதுதான்.

    நம் திரைப்படக் கதைகளில் பொதுவாக அமைந்த கருப்பொருள்களை ஆராய்ந்தால் பத்திருபது வகைமைகளுக்குள் சிக்கென்று அடங்கிவிடுகின்றன. நல்ல வேலைக்காரன், செல்வச் செருக்கால் ஆடி அடங்குபவன், தன் காதலை வெளிப்படுத்தாமல் தோற்கின்ற நல்லவன், தன் காதலுக்காக எண்ணற்ற இடர்களை எதிர்கொண்டு இறுதியில் வெல்கின்றவன், தாய் சொல் தவறாத மகன், தங்கை/தமக்கைக்காகத் தன்னையே உருக்கிக் கொள்பவன், உடன்பிறந்தோரைக் கட்டிக் காத்து இறுதியில் ஏமாறியவன், பழிக்குப் பழி வாங்கும் சூளுரை செய்து அவ்வழியே நடக்கும் நாயகன், தனக்கு நேரும் எல்லாத் தீங்குகளையும் ஏற்றுக்கொண்டு பொறுமையின் பிறப்பிடமாகத் திகழும் நாயகி, அரசுக்கு எதிரான கலகங்களைச் செய்பவன், அரசாங்கத்தில் / நீதி மன்றத்தில் / கிராமப் பஞ்சாயத்தில் நீதி நெறி பிறழாத நேர்மையன், கடவுள் பக்தி, வளர்ப்பு விலங்குகளின் நல்வித்தைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

    Triologies in Tamil cinema

    இவ்வகைப் படங்களில் மிகவும் பொருட்படுத்தத் தக்கவாறு ஒரு படவரிசை உள்ளது. தனக்கு நேர்ந்த சமூகத் தீமைகளால் பாதிப்புற்றவன் அவற்றுக்கு எதிராகப் பொங்கியெழுந்து தானே நீதி கேட்பவனாகவும் நீதி வழங்குபவனாகவும் மாறி நின்ற உண்மையான மனிதர்களைப் பற்றிய பட வரிசை. உடைமையாளர்களாலோ சூழ்ச்சியாளர்களாலோ ஆளும் வர்க்கத்தாலோ தான் வஞ்சிக்கப்பட்டதற்கு எதிராக நொடியும் பொறுத்திராது கருவியேந்திய தொன்மனத்தின் எடுத்துக்காட்டுகளாக அவர்கள் வாழ்ந்து மடிந்தார்கள். அவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கி நாட்டுப் புறக் கதைகள், பாடல்கள் தோன்றின. மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், கழுகுமலைக் கள்ளன், கும்பக்கரை தங்கையா, சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி, வனயுத்தம் ஆகிய படங்களின் வரிசையே அது. அரசும் நிர்வாகமும் எப்படிப் பார்த்தாலும் அந்நிலத்து மக்கள் அவர்களைத் தம் நாயகர்களாகவும் துயர்தீர்க்க வந்த தோழமைகளாகவும் பார்த்தார்கள். அவர்களைப் பற்றியவை அனைத்தும் அந்நாள்களின் அன்றாடச் செய்திகளாயின. அவர்களை பற்றிய திரைப்படங்கள் வெளியானதும் ஒரு நல்விளைவுதான். இன்றைக்குக் கரிமேடு கருவாயனைப் பற்றி யார்க்கும் தெரியாது. ஆனால், உண்டி வில்லைக் கொண்டே அவன் ஆயுதப்படையினரை எதிர்த்து நின்றான் என்பது வியப்பூட்டும் வீரம்தானே ?

    English summary
    Here is the list of Triologies made in Tamil cinema like Hollywood earlier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X