Trisha: லேட்டாகும் விடாமுயற்சி.. டொவினோ படத்தில் அதிரடியாக இணைந்த த்ரிஷா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திருவனந்தபுரம்: தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டொவினோ தாமஸ் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலி உடன் ஹே ஜூட் படத்தில் நடித்த த்ரிஷா த்ரிஷய்ம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் மோகன்லாலின் ராம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு மலையாள படத்தில் கமிட் ஆகி உள்ளார் நடிகை த்ரிஷா. மற்ற ஹீரோயின்கள் பாலிவுட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும், 20 வருடங்களாக தென்னிந்திய நடிகையாகவே வலம் வருகிறார் த்ரிஷா.
இது எத்தனாவது ரவுண்டு: ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக ஒரு சின்ன சீனில் துணை நடிகையாக நடித்த த்ரிஷா சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். சாமி, கில்லி, சிவகாசி, மங்காத்தா என டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த த்ரிஷா சிறிய கேப்புக்கு பிறகு ஜெஸ்ஸியாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஜானுவாக தமிழ் சினிமாவில் தான் விட்ட அதே இடத்தை திரும்ப பிடித்தார். அவர் அணிந்து வந்த மஞ்சள் நிற சுடிதார் மார்க்கெட்டில் தீயாக விற்பனையானது. இதன் பிறகு த்ரிஷா கம்பேக் கொடுப்பது கஷ்டம் தான் என நினைத்துக் கொண்டிருக்கையில், குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் அகநக அகநக முகநகையே என ரசிகர்களை உயிர் உங்களுடையது தேவி என வந்தியத்தேவன் கார்த்தியை போலவே சொல்ல வைத்து விட்டார்.
லியோ ஹீரோயின்: கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என இதுவரை 4 முறை விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்த த்ரிஷா 5வது முறையாக பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் லியோ படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
லியோவில் காஷ்மீர் பனிமலைகளுக்கு மத்தியில் த்ரிஷாவை மீண்டும் "எனை சாய்த்தாளே" பாடலில் வருவது போல பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

டொவினோ தாமஸ் ஜோடி: லியோவை தொடர்ந்து தி ரோடு எனும் உமன் சென்ட்ரிக் படம், பிருந்தா எனும் வெப்சீரிஸ் என ஒரு சில படங்கள் த்ரிஷா கைவசம் உள்ள நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் இவர் தான் ஹீரோயின் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இதுவரை அது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அதிரடியாக தான் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் நடிக்கப் போகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டொவினோ தாமஸ் நடித்த ஃபாரன்ஸிக் படத்தை இயக்கியவர்கள் தான் இந்த படத்தையும் இயக்குகின்றனர்.


Click it and Unblock the Notifications











