Thug Life: சர்ச்சைகளுக்கு நடுவில் தக் லைஃப் ஸ்பாட்டில் த்ரிஷா... ட்ரெண்டாகும் இன்ஸ்டா ஸ்டோரி!
சென்னை: முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பின்னர் இன்னும் பிஸியாகிவிட்டார். தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ள த்ரிஷா, தற்போது ஷேர் செய்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது.
தக் லைஃப் ஸ்பாட்டில் த்ரிஷா
பிரசாந்தின் ஜோடி உள்ளிட்ட சில படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தவர் த்ரிஷா. அமீரின் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து சூப்பரான கம்பேக் கொடுத்த த்ரிஷா தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக த்ரிஷா தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக காணப்படுகிறார். நடிகர்கள், நடிகைகள் பற்றி ஏவி ராஜூ அவதூறாக பேசியதற்கு த்ரிஷா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து த்ரிஷா இல்லை என்றும் த்ரிஷா மாதிரி ஒரு பெண் எனவும் விளக்கம் கொடுத்திருந்தார் எவி ராஜூ. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு வீடீயோ வெளியிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சையானதை அடுத்து த்ரிஷாவுக்கு ஆதரவாக திரையுலகில் இருந்து சில நட்சத்திரங்கள் குரல் கொடுத்தனர். சில மாதங்களுக்கு முன்னர் லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது பற்றி மன்சூர் அலிகான் பேசியதும் பெரிய சர்ச்சையானது. தொடர்ச்சியாக த்ரிஷாவின் பெயர் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர் தனது கேரியரில் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்.
இந்த சர்ச்சைகளுக்கும் நடுவில் தக் லைஃப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. நாயகன் படத்திற்குப் பின்னர் 33 ஆண்டுகள் கடந்து மணிரத்னம் - கமல் கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி கமலின் 234வது படமாக உருவாகி வரும் இதன் டைட்டில் தக் லைஃப் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் தக் லைஃப் படப்பிடிப்பை தொடங்கினார் மணிரத்னம். முதலில் கமல்ஹாசன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் தொடங்கிய தக் லைஃப் படப்பிடிப்பில் த்ரிஷா பங்கேற்றுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாவில் அப்டேட் செய்துள்ள அவர், தக் லைஃப் ஸ்க்ரிப்ட் பேப்பரையும் ஷேர் செய்துள்ளார். ஒருபக்கம் த்ரிஷாவின் பெயரை வைத்து கடும் சர்ச்சை வைரலாகி வரும் நிலையில் அவரோ தக் லைஃப் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். த்ரிஷா போர்ஷன் முடிந்ததும் அடுத்த மாதம் ஜெயம் ரவியின் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளாராம் மணிரத்னம்.


Click it and Unblock the Notifications