சாராயம் காய்ச்சிய டிடிஎஃப் வாசன்?.. அவரா வந்து வண்டில ஏறுகிறாரே.. சும்மாவே இருக்கமாட்டாரு போல
சென்னை: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன். 2K கிட்ஸ்கள் மத்தியில் வெகு பிரபலமான அவர் பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி அவர் சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறை சென்று வெளியே வந்து அமைதியாக இருந்த அவர்; இப்போது ஒரு வீடியோ மூலம் மீண்டும் சர்ச்சையை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன். குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற அவர் அதே அளவு சர்ச்சையையும் சந்தித்திருக்கிறார். மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் பச்சைக் குத்திக்கொண்டார்.
தொடர் சர்ச்சை: தனது பிறந்தநாளுக்கு அவர் மீட்டப் வைத்தபோதே பெரும் விவாதமாகியது. அதனைத் தொடர்ந்து சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. ஆனால் அந்தக் காரை தான் ஓட்டவில்லை என்றும்; தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

வாசனுக்கு பெரும் விபத்து: அடுத்ததாக சென்னை - பெங்களூருவுக்கு பைக் ரைட் செய்துகொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டார். அப்போது அவர் பயங்கர விபத்தில் சிக்கி காயமும் அடைந்தார். அதுதொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த விவகாரத்தில் அவர் சிறைக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைசென்ஸ் ரத்து: சிறைக்கு சென்ற அவர் ஏகப்பட்ட முறை ஜாமீனுக்கு ட்ரை செய்தார். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. ஒருவழியாக அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது டிரைவிங் லைசென்ஸை 10 வருடங்களுக்கு ரத்து செய்தது. இது டிடிஎஃப்புக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்; ஓவர் அலப்பறை செய்த டிடிஎஃப் வாசன் இனி அடங்கி கிடப்பார் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர். குறிப்பாக அவரை பார்த்து தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் என்றார்கள்.
மஞ்சள் வீரனும் இல்லை: இதற்கிடையே அவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். அதுதொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் அந்த சமயத்தில் சிறைக்கு சென்றதால் ஷூட்டிங் தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தாலும் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் வாசனை பலரும் கடுமையாக ட்ரோல் செய்தார்கள். இதனையடுத்து அமைதியானார்.
மீண்டும் சர்ச்சையில்: இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், "நான் ஓபனாகவே சொல்கிறேன். இப்போது நான் மது அருந்தமாட்டேன். மதுவின் வாடையே எனக்கு பிடிக்காது. ஆனால் கல்லூரி படிக்கும்போது குடிப்பேன். நான் எதற்காக மதுவை விட்டேன் என்றால் வாழ்க்கையில் பெரிதாக வெல்ல வேண்டும் என்பதற்காக விட்டேன். இருப்பினும் ஒரு விஷயத்தை சொல்கிறேன். லாக் டவுன் போட்டார்கள். அதனால் எங்கும் வெளியே போக முடியாமல் இருந்தது. எனவே அன்னாசி பழத்தை வைத்து நாங்களே மது தயாரித்தோம். இப்படி சொல்வதால் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" என்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்களோ ஓஹோ வீட்டிலேயே சாராயம் காய்ச்சினாரா வாசன் என்று அதனை அதிகம் ஷேர் செய்து வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











