TTF Vasan: நான் ஸ்டண்ட் எதுவும் பண்ணலை.. விளக்கம் கொடுத்த டிடிஎப் வாசன்!
சென்னை: நடிகர் டிடிஎப் வாசன் தொடர்ந்து பைக்கில் சாகச பயணங்களை மேற்கொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் இவ்வாறு சாகச பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிச்சி தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் டிடிஎப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தான் ஸ்டண்ட் எதுவும் செய்யவில்லை என டிடிஎப் வாசன் பேட்டி: நடிகர் டிடிஎப் வாசன் தொடர்ந்து பைக்கில் சாகச பயணங்களை மேற்கொண்டு யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதன்மூலம் கிடைத்த பிரபலத்தையடுத்து அவருக்கு மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய பைக்கில் சாகச பயணம் மேற்கொண்ட டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கியுள்ளார்.
சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் சாகச பயணம் மேற்கொண்டபோது அவர் வீலிங் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது வண்டி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் காயங்களுடன் டிடிஎப் வாசன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டதாக டிடிஎப் வாசன் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாலுசெட்டி சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது ஓட்டுநர் உரிமத்தையும் போலீசார் ரத்து செய்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎப் வாசன், தான் ஸ்டண்ட் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தெரியாமல் நடந்த சின்ன விபத்துதான் என்று கூறியுள்ளார். இந்த விபத்து நடந்திருக்க தேவையில்லை என்றும் சின்ன ஸ்லிப்பில் கீழே விழுந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். விழும்போது வண்டி தூக்கிவிட்டதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎப் வாசனை 15 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி வரை இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மஞ்சள் வீரன் படத்தில் நடித்துவந்த டிடிஎப் வாசன் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











