திருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்!
மும்பை: திருமணம் செய்ய மறுத்த சீரியல் நடிகையை தயாரிப்பாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த மால்வி மல்கோத்ரா 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான உதான் என்ற டிவி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ஹோட்டல் மிலன் என்ற பாலிவுட் படத்தின் மூலம் பெரிய திரைக்கும் அறிமுகமானார் மால்வி மல்கோத்ரா.

ஒண்டிக்கு ஒண்டி
தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு 9 மணியளவில் கஃபேவில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார் மால்வி. அப்போது மும்பை அந்தேரி அருகே வெர்சோவா பகுதியில் காரில் வந்த யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் மால்வி மல்கோத்ராவை வழிமறித்துள்ளார்.

கத்திக்குத்து
ஏற்கனவே தயாரிப்பாளர் என மால்விக்கு அறிமுகம் ஆன யோகேஷ், ஏன் தன்னிடம் பேசுவதில்லை என கேட்டு மால்வியுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த யோகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மால்வியை சரமாரியாக குத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சை
இதில் வயிறு மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த மால்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மால்வி, ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோஷியல் மீடியா மூலம்
இது தொடர்பாக யோகேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள வெர்சோவா போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யோகேஷ் சோஷியல் மீடியா மூலம் நடிகை மால்விக்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானது தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு வற்புறுத்தல்
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மால்வி யோகேஷை நேரில் சந்தித்துள்ளார். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யோகேஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மால்வியை வற்புறுத்தி வந்துள்ளார்.

பெரும் பரபரப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்த மால்வி, யோகேஷிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் மால்வியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடிகை ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











