டிவி நடிகை தற்கொலை வழக்கு.. தலைமறைவான பிரபல தயாரிப்பாளர் திடீர் கைது.. திரையுலகம் அதிர்ச்சி!
ஐதராபாத்: சின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் தலைமறைவான சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐதராபாத் மதுரா நகரில் வசித்து வந்தவர் சீரியல் நடிகை ஸ்ரவாணி கொண்டபள்ளி.
இவர் தெலுங்கில், மனசு மமதா, மௌனராகம் உள்பட சில டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர். சில படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

டிக்டாக் காதல்
இவர், கடந்த சில நாட்களுக்கு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஸ்ராவணி குடும்பத்தினர் அளித்த புகாரில், ஸ்ராவணிக்கு, தேவராஜ் ரெட்டி என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டினார்.

காதலை ஏற்கவில்லை
அதிர்ச்சி அடைந்த ஸ்ரவாணி, பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மிரட்டி வந்ததால் தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறியிருந்தனர். ஆனால், நடிகை ஸ்ரவாணியும் டிக்டாக் தேவராஜும் காதலித்து வந்ததாகவும் நடிகையின் வீட்டில் இந்த காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

டார்ச்சர் செய்தார்
இந்நிலையில் தேடப்பட்டு வந்த தேவராஜ், சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார். சாய் கிருஷ்ணாவிடம் விசாரித்தனர். ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டனர்.

வாக்குவாதம்
அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

தயாரிப்பாளர் அசோக் ரெட்டி
போலீசார் தேவராஜ், சாய் கிருஷ்ணா இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளரும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தெலுங்கில் ஹிட்டான 'ஆர்எக்ஸ் 100' உள்பட சில படங்களை தயாரித்தவர் அசோக் ரெட்டி.
இவர் தற்கொலை செய்துகொண்ட நடிகையுடன் பேசும் ஆடியோ சில நாட்களாக பரவி வந்தது.

பிரேமதோ கார்த்திக்
இதையடுத்து போலீசார் அசோக் ரெட்டிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தலைமறை வானார். அசோக் ரெட்டி தயாரித்த பிரேமதோ கார்த்திக் என்ற படத்தில் ஸ்ரவாணி சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். சாய் கிருஷ்ணா, தேவராஜ், அசோக் ரெட்டி மூன்று பேருமே ஸ்ரவாணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்தே அவர் தற்கொலை செய்துள்ளார்.

அசோக் ரெட்டி கைது
இந்நிலையில் தேடப்பட்டு வந்த அசோக் ரெட்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ஸ்ரவாணியுடன் 2017 ஆம் ஆண்டில் இருந்தே தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அசோக் ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











