twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்

    By Siva
    |

    Recommended Video

    10 Facts about Crazy Mohan: இரட்டை அர்த்தம் இல்லாம வசனத்தை எழுதிய புகழ் கிரேசி மோகன்- வீடியோ

    சென்னை: என்னை "வருது, வருது" என்று ரெண்டு பேர் தான் உரிமையோடு அழைப்பார்கள். ஒருவர் என் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர். அடுத்தது என் பெருமைக்குரிய நண்பன் கிரேஸி மோகன் என்று நடிகர் டிவி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    வாய்விட்டு சிரித்தால் வாழ்வாங்கு வாழலாம் என்கிறார்களே.
    சிரிப்பவர்களுக்கு மட்டும் தானா அது.. சிரிக்க வைப்பவர்களுக்கு இல்லையா இறைவா ...

    கிரேஸி மோகனின் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் எனக்குள் எழுந்த ஆதங்கம்
    இது மட்டுமே.

    TV Varadharajan misses dear friend Crazy Mohan

    அப்பொழுதுதான் திருப்பதி திருமலை அடைகிறேன். மோகனின் மறைவுச் செய்தி உண்மையா என்று பலர் எனக்கு தொலைபேசியில் அழைக்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. காந்தனை தொடர்பு கொண்டபோது பதில் பேசவில்லை; அழுதார். புரிந்து கொண்டேன். அதற்குப்பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய எனக்கு விருப்பமில்லை உடனே சென்னை புறப்பட்டுவிட்டேன்.

    நாங்கள் பிறப்பதற்கு முன்பே, எங்கள் இருவரின் பெற்றோர்கள் 1945-1950 காலகட்டத்தில் மைலாப்பூரில் அடுத்த அடுத்த இல்லத்தில் வசித்தவர்கள்; நன்கு அறிந்தவர்கள். மோகன் தாத்தா அடிக்கடி அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்வார்.

    மோகனும், நானும் நாடக மேடையில் சம காலத்தவர்கள். என் நண்பர் சீனாவின் தயாரிப்பில் முதன் முதலாக நாங்கள் மேடையேறிய 1975ல் தான் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகம் மூலமாக, ஆர்.மோகன், கிரேஸி மோகனாக அவதாரம் பெற்றார். 1978ல் நண்பர் சீனாவும், நானும் மோகனை சந்தித்து எங்கள் குழுவுக்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி கேட்டோம். மோகனோ, தானே ஒரு நாடகக் குழு ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதில் தான் தயாரிக்கும் முதல் நாடகத்தில் கதாநாயகனாக நான் நடிக்க வேண்டும் என்றும் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். பிறகு எங்கள் குழுவுக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுப்பதாக உறுதியளித்தார்.

    இன்றைய க்ரேஸி க்ரியேஷன்ஸின் பூர்வாஸ்ரம பெயர் "விநாயகா அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்.'. கோணி மூட்டையையும், ஜெயராமனையும் சுற்றி கதை வலம் வந்ததால், முதலில் இதற்கு "கோணி ஜெயராம்" என்றுதான் பெயர் வைத்தோம். அப்பொழுது வாணி ஜெயராம் பாடகராக பிரபலமான நேரம். ஆகவே வேண்டாம் என்று அந்த நாடகத்திற்கு "கொல்லத்தான் நினைக்கிறேன்" என்று நாமகரணம் செய்தோம்.. .அதில் எனது கதாபாத்திரம் பாட்டு வாத்தியார் ஜெயராமன். இன்றும் நான் பெருமையாகச் சொல்லிக்கொள்வது கிரேஸி மோகன் குழுவின் முதல் கதாநாயகன் நான் தான் என்று... எவ்வளவோ நடிகர்கள் மேடையில் நடிக்கக் காத்துக் கொண்டிருந்த காலத்தில், மோகன் எனக்கு அந்த பெருமையைக் கொடுத்ததை நான் என்றும் நினைவு கூர்வேன். அந்த நாடகமே பிற்காலத்தில் சிறிய மாற்றங்களுடன் "மிடில் கிளாஸ் மர்டர்" என்று புதிய வடிவத்தில் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவினரால் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது.

    TV Varadharajan misses dear friend Crazy Mohan

    எங்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, 36 பீரங்கி லேன் என்ற நாடகத்தை நண்பர் சீனாவிற்கும், எனக்கும் மோகன் அளித்தார். எங்கள் நாடக வாழ்க்கையில் இது மிகப்பெரிய மைல் கல்.

    அப்பொழுது மோகன், அம்பத்தூரில் சுந்தரம் க்ளேடன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். காலை ஏழு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார். போகும் வழியில் சீனா வீட்டில் அன்று தான் எழுதிய ஒரு காட்சியின் வசனப்பிரதியைக் கொடுத்துவிட்டுப் போவார். சீனாவும் நானும் அப்பொழுது பாங்க் ஆப் இந்தியாவின் கதீட்ரல் ரோடு கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அந்த காட்சியை அவர் வங்கிக்கு எடுத்துக் கொண்டு வருவார். இருவரும் அதைப் படித்து, படித்து சிரித்துக் கொண்டே இருப்போம்.

    மாலை வீடு திரும்போது மோகன் எங்கள் வங்கிக்கு வருவார். "தினமும் அம்பத்தூருக்கு ஸ்கூட்டரில் சென்று வருவது ரொம்ப அலுப்பாக இருக்கிறது. உங்க பேங்குல ஒரு ப்யூன் வேலை வாங்கி குடுங்களேன். வவுச்சரையும் கொண்டு குடுக்கறேன். அப்படியெ இந்த ஸ்டூல்ல உக்காந்து ஸ்கிரிப்டும் எழுதிடுவேன்" என்று நகைச்சுவையோடு சொல்லுவார்.

    குறைந்த பட்சம் ஒரு காட்சி 100 பக்கமாவது இருக்கும். ஒரு நகைச்சுவை சம்பவத்தை வைத்து மோகன் ஒரு காட்சி எழுதினால், அதற்கு மேல் யாராலும் அதில் இன்னொரு நகைச்சுவை வசனத்தையோ சம்பவத்தையோ நினைத்துக் கூட பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு முழு பரிமாணம் அதில் அடங்கிவிடும்.

    36 பீரங்கி லேன் நாடகம் மிகக்குறுகிய காலத்தில், அதாவது நான்கு அல்லது ஐந்து மாதங்களில் நூறு காட்சிகளைக் கொண்டாடியது. நூறாவது காட்சி விழா ராணி சீதைஹாலில், இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்றது. மோகனின் நகைச்சுவையைப் பாராட்டும் போது, பாரதிராஜா , "இவரது நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலே போதும், சிரிக்கலாம்" என்றார். மோகன் பதிலளிக்கும்போது, "என்னதான் கேட்டாலும், அந்த வசனங்களை நடிகர்கள் ஏற்ற இறக்கங்களோடு நடித்தால் தான் சிறக்கும்" என்றார். மறுநாள் பத்திரிகைகளில், 36 பீரங்கி லேன் நாடக விழா.. பாரதிராஜா கிரேஸி மோகன் மோதல் என்று தலைப்பிட்டு, ஒரு சாதாரண கருத்துப் பரிமாற்றத்தை பரபரப்பாக்கிவிட்டார்கள்.

    TV Varadharajan misses dear friend Crazy Mohan

    மோகனின் எழுத்துக்கள் சிரஞ்சீவித்தனம் வாய்ந்தவை என்பதற்கு 36 பீரங்கி லேன் மிகப்பெரிய உதாரணம். இந்த நாடகத்தை எங்கள் குழுவே 100 காட்சிகளுக்கு மேல் மேடையேற்றியது. பின்னர் அதே நாடகம், "கல்யாணத்துக் கல்யாணம்" என்ற பெயரில் நாங்களே நடிக்க, சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பாகியது. பின்னர் நாடக மேடையில் நாங்கள் சற்று ஓய்வெடுக்க, மோகன் வேண்டுகோளுக்கிணங்க அதே நாடகத்தை அவரது குழுவினர் "அன்புள்ள மாதுவுக்கு" என்று நூற்றைம்பது காட்சிகளுக்கு மேல் மேடையேற்றினார்கள். ஆம் மோகனின் வசனங்கள் எந்த காலத்திலும் சிரிக்க வைக்கும் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்.

    மோகன், பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தாருடன் எங்கள் பயணம் மிகவும் சுவையானது. மோகனின் வெற்றிக்கு பெரிய பலம் அவரது தாத்தா. சில நேரங்களில் அவரது தாத்தாவை சந்திந்து அவருடன் பேசவே நாங்கள் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறோம்.

    "மைக்கேல் மதன காமராஜன்" படத்தில் ஒரு காட்சி எங்கள் திருவல்லிக்கேணி இல்லத்தில் படமாக்கப்பட்டதற்கு மோகன் தான் காரணம். கோயில் பின்னணியில் அந்த காட்சியை படமாக்க வேண்டும் என்று கமல் விரும்பியபோது, மோகன் எங்கள் திருவல்லிக்கேணி வீட்டிற்கு கமலை அழைத்து வந்துவிட்டார். கமலுக்கு எங்கள் வீடு ரொம்ப பிடித்து விட்டது. கமலும் ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் என் தகப்பனாரிடம் சில காலம் படித்த மாணவர் என்பதால், என் தந்தை ஒப்புக்கொண்டார். அந்த காட்சி தொடக்கத்தில் ஒரு மளிகைக் கடையில் மோகன் பேசுவதும், அதைத் தொடர்ந்து, கமல் ஊர்வசி சம்பந்தப்பட்ட காட்சிகளும் எங்கள் வீட்டில் படமாக்கப்பட்டது தான்.. மோகனும் கமலும் அந்த காட்சியை நகைச்சுவையால் சிறப்பாக்கியதைக் கண்ட நாங்கள், நம்ம மோகன், நம்ம கமல் என்று பெருமையாக சொல்லத் தொடங்கினோம். இந்த படப்பிடிப்பின்போது எங்க அம்மா தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து வரச்சொல்லியதை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் மோகன் தனக்கே உரிய நகைச்சுவையுடன் சொல்லுவார்.

    எப்படியாவது இன்னொரு நாடகம் மோகனிடம் பெற்று மேடையேற்றவேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் அவா. ஆனால் அந்த நேரத்தில் சினிமாக்களில், குறிப்பாக, கமலுடன் பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, அவரது குழுவிற்கே நாடகம் எழுத அவருக்கு நேரம் இல்லாத போது, நாம் எப்படி அவரைத் தொந்தரவு செய்யமுடியும்..

    அடிக்கடி மோகன் என் வீட்டிற்கு போன் பண்ணுவார். அவர் எழுதிய வெண்பாக்களை ஈ மெயிலில் அனுப்புவார். ஆன்மீக சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள என் தம்பி தாமல் ராமகிருஷ்ணனிடம் பேசுவார். ஒவ்வோரு முறை போன் பண்ணும்போதும், 'வருது உன் அண்ணா இருக்காரா... ஒரு சந்தேகம். அவர் உனக்கு அண்ணாவா இல்ல தம்பியா" என்று கேட்காமல் இருந்ததில்லை.

    எங்கள் குழுவின் நாடகங்களை பார்க்க வருவார். சோவின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" நாடகத்தைப் பார்த்துவிட்டு, இது போன்ற புகழ்பெற்ற சாதனையாளர் மேடையேற்றிய நாடகத்தை மீண்டும் அதன் பெருமை குலையாமல் மேடையேற்ற ஒரு தைரியம் வேண்டும் வரது. பாராட்டுக்கள் என்றார். ஶ்ரீ தியாகராஜர் இசை நாடகம் நாங்கள் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.. உனக்கு சிகரம் என்று புகழ்ந்தார்.

    ஒராண்டுகளுக்கு முன்பாக என்னை பாரதிய வித்யா பவன் மேடையில் நெகிழவைத்தார். 'நம்ம வரது தியாகராஜர் நாடகம் மூலமாக ஒரு பெரிய சாதனை படைக்கிறான். ஆனா அவன் நல்ல நகைச்சுவை நடிகன்,. இப்படியே ஆன்மீக நாடகமா போயிடக்கூடாது. அதுக்காகவே, என்னோட அடுத்த டிராமா நான் நம்ம வரதுவுக்குத் தான் எழுதப்போறேன். சாக்லேட் கிருஷ்ணா மாதிரி ஒரு சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம் அவனுக்குக் குடுக்கப் போறேன்' அப்படீன்னு பேசினார்.. அன்று வந்திருந்த நாடகத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், எனக்கு வாழ்த்து சொல்லத் தொடங்கிவிட்டார்கள். நான் மறு நாள் மோகனை இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் போது, இப்படி சொன்னேன்.

    " மோகன் நேற்று மேடையில என்னையே நான் மறந்துபோனேன். நீ இருக்கற பிஸியில் உன் குழுவுக்கு நாடகம் எழுதறதுக்கே நேரமில்லை; இதுல எனக்கு அடுத்த நாடகம் குடுக்கணும்னு உன் மனசுல தோணி அதை ஒரு பொதுமேடையில சொன்னதே எனக்கு பெரிய அங்கீகாரம். எனக்கு ஒரு ஸ்கிரிப்டும் கொடுத்தா அது என் பாக்கியம்" அப்படின்னேன். "இல்லடா வரது நிச்சயம் ஒரு ஸ்கிரிப்ட் உண்டு உனக்கு" அப்படீன்னார். தொடர்ந்து சொன்னது தான் எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    ' வரது, ரஜினி நடித்த ராகவேந்திரர் படத்திற்கு முதல்ல நான் தான் கதை வசனம் எழுத முடிவானது. அதற்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு பெரிய ஸ்க்ரிப்ட் பண்ணத் தொடங்கினேன். அந்த பைல் என்கிட்ட இருக்கு. நீ தியாகராஜர் நாடகம் பண்ணி இது போல மோகனும் நாடகம் பண்ண முடியும்னு ப்ரூவ் பண்ணு. இதை படி. ஓகேன்னா, இதுக்கு தேவையான வசனங்களையும், பாடல்களையும் எழுதித் தரேன். ஆனா ஒண்ணு நிச்சயமா உனக்கு என் காமெடி டிராமா உண்டு. இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லேன்னு சொல்லி அந்த ராகவேந்திரர் பைலை என்கிட்ட குடுத்தார். மிகச்சிறப்பான உருவாக்கம். அதற்கு வசனங்களும், கவிதைகளும் எழுத ஏற்பாடுகள் செய்யலாம்னு முடிவெடுக்கும்போது, மோகன் மறைந்துவிட்டார்.,. நான் மட்டுமல்ல, எங்க குழு குடுத்துவைச்சது அவ்வளவுதான்.

    அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அவருக்கு செட் போடும் குமார் ஷண்முகம் சொன்னது கண்ணீரை வரவழைத்துவிட்டது. இவர்கள் மோகனிடம் "வரதராஜன் சாரின் துக்ளக் தர்பார் நாடகம் பாத்தீங்களா சார்"என்று கேட்டார்களாம். "இல்லப்பா. பாலாஜி பாத்துட்டு ரொம்ப பிரமாதமா இருக்குண்ணான். பாக்கணும். அதுக்கு முன்னாடி வருதுக்கு ஒரு காமெடி ஸ்கிரிப்ட் குடுக்கணும் அந்த கமிட்மெண்ட் இருக்குன்னு" சொன்னாராம்.

    எனக்கும் ஒரு ஆசை இருக்கு. நான் நடித்த மோகனின் இரண்டு நாடகங்களில் - அதாவது "கொல்லத்தான் நினைக்கிறேன்" அல்லது
    "36 பீரங்கிலேன்" இரண்டில் ஒன்றையாவது மேடையேற்றி, எங்கள் யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினரின் வெள்ளிவிழா ஆண்டில் எங்கள் நட்புக்கு காணிக்கையாக்க விரும்புகிறேன்.

    மோகன் எல்லாருக்கும் நண்பர். யாரைப் பற்றியும் தவறாகப் பேசமாட்டார். எல்லாரையும் ஊக்கப்படுத்துவார். நகைச்சுவையும், இறை பக்தியும், ஆன்மிகமும், உண்மையான அன்பும் அவரது குணாதியங்கள். அவரது பலம் அவரது குழுவினர். அவரது வெற்றிக்கு அடித்தளம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை, வேறுபாடு இல்லாமல் நட்பு பாராட்டுவது. புகழின் உச்சியில் இருந்தாலும், அதை தன் உள்ளே கனமாக ஏற்றிக்கொள்ளாமல் இருந்தது..

    என்னை "வருது, வருது" என்று ரெண்டு பேர் தான் உரிமையோடு அழைப்பார்கள். ஒருவர் என் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர். அடுத்தது என் பெருமைக்குரிய நண்பன் கிரேஸி மோகன்.

    மோகனுக்கு அஞ்சலி செலுத்தும்போது, என்னை "வருது வருது" என்று மோகன் அழைப்பது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருக்கிறது. அது நிரந்தரமாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

    மறைந்தாலும் நிரந்தரமாக வாழ்பவர்கள் ஒரு சிலரே.

    அந்த வரிசையில் உயரிய இடத்தைப் பெற்றிருக்கிறார் மோகன்.

    வாழ்க நீ எம்மோகன், இவ்வையகம் கடந்தும் வாழியவே என்று வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor TV Varadharajan has posted a lengthy emotional post on Facebook about his friend Crazy Mohan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X