கள்ளக்குறிச்சி சென்ற விஜய்! நாட்டுக்காக நெஞ்சுல குண்டு வாங்கியிருக்காங்க பாவம்.. பிரபலம் கமெண்ட்!
கள்ளக்குறிச்சி: ஒட்டுமொத்த தமிழ்நாடும் பதற்றமாக ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு உள்ளது என்றால் அது கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாகத்தான். முதலில் 20க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 100 பேர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் விஷ சாராயம் அருந்தியவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால் தற்போதைய நிலவரப்படி, அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதி காலை நிலவரப்படி 45 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கின்றது. விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது.

விஜய் கண்டனம்: இந்த நிகழ்வு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து நேறு காலை அறிக்கை விட்டிருந்தார். அதில், " கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தமிழ்நாடு அரசின் அலட்சியம்: கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கள்ளக்குறிச்சிக்கு சென்ற விஜய்: அதன் பின்னர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷச்சாராயம் அருந்தியவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார். இது தொடர்பாக புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் தமிழில் செயல்பட்டு வரும் பல்வேறு ஊடகத்தினரும் செய்தியாக்கினர். விஜய் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த நிகழ்வையொட்டிய செய்தி ஒன்றில், செய்தி வாசிப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான அனிதா சம்பத் கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்துள்ளார்.

நாட்டுக்காக போராடி: அதில், " நாட்டுக்காக போராட போனபோது தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும்போது நெஞ்சில் குண்டுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமா இருக்காங்க பாவம்" என பதிவிட்டுள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது. மேலும் அனித சம்பத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அனிதா சம்பத் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4இல் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











