தவெக அலுவலகம் மினி விலாக் போட்ட ரசிகர்.. ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்டா.. வைரலாகும் கமெண்ட்ஸ்
சென்னை: அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு தொண்டர்கள் சென்று புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது என்பது புதிதல்ல. ஆனால், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற ரசிகர் ஒருவர் எடுத்துள்ள மினி விலாக் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, அந்த வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்கள் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ்தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை சுற்றிக் காட்டுகிறார். "இதுதான் தலைமை அலுவலகம்" என்று தொடங்கும் அவர், அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார வாகனத்தையும் காட்டி, "இதுதான் தளபதி விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய வாகனம்" என்று கூறுகிறார்.
அதன்பிறகு அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் ஐம்பெரும் தலைவர்களின் சிலைகளையும் ஒவ்வொன்றாகக் காட்டி, அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். "தளபதியை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. அலுவலகம் மிகவும் அருமையாக இருக்கிறது" என்றும் அவர் உற்சாகமாக பேசியுள்ளார். அவருடன் வந்திருந்த நண்பர்களும் அந்த இடத்தை வீடியோவாக பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதைப் பகிர்ந்த ரசிகர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்ட் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
"நம்மகிட்ட கிரவுண்ட் ஃப்ளோர் மட்டும்தான் இருக்கு. அதையே வெச்சு கோட்டையை பிடிச்சுட்டோம். நாளைக்கு மற்ற பெரிய கட்சிகள் மாதிரி பல மாடிகளோட பிரம்மாண்ட அலுவலகம் வந்துட்டா, அதை பார்த்து என்னென்ன பேசுவாங்களோ!" என்று அவர் பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல், "கட்டிடம் பெரியதா, சின்னதா என்பதல்ல முக்கியம்... மக்கள் மனசுல இடம் பிடிக்கிறதுதான் முக்கியம்", "ஆபீஸை விட அதுக்குள்ள இருக்கும் நம்பிக்கையைத்தான் ரசிகர்கள் கொண்டாடுறாங்க", "ரசிகர்கள் இப்படி உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதுதான் அந்த கட்சியின் பலம்" என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சாதாரண மினி விலாக் வீடியோவாக வெளியான இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications