விஜய் 50வது பிறந்தநாள்! நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு
நாமக்கல்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அதன் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். ஏற்கனவே தனது விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த விஜய் தற்போது நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். இம்முறை தனது பிறந்தாளுக்குப் பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக கல்வி ஊக்கத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது.

அந்த அறிவிப்பில், " தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் "தளபதி விஜய்". 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்" வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் "தமிழக வெற்றிக் கழகம்" சார்பாகப் பாராட்ட உள்ளார்.

உதவித்தொகை: முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னயாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி. திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

இரண்டாம் கட்டம்: அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர். திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். "தளபதி விஜய்", மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கத்தேர் வழிபாடு: விஜய் வரும் 22ஆம் தேதி தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நலமுடன் இருக்க வேண்டி, விஜய்க்கு நெருங்கியவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், நாமக்கலில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











