ஜன நாயகன் லீக் ஆனதற்கு BJP அமைச்சர் தான் பொறுப்பு.. செங்கோட்டையன் குற்றச்சாட்டு.. என்ன DMKவை விட்டுட்டாரு?
சென்னை: நடிகர் விஜய் நடித்து ரிலீஸ் சான்றிதழ் பெற CBFC சான்றிதழுக்காக காத்துக் கொண்டு இருந்த ஜன நாயகன் படம் சில தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது. இது மொத்த திரை உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் முதற்கட்டமாக 6 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்று இதுவரை முடிவாகாத நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் பாஜக அமைச்சர் தான் இதற்கு பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். படம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதற்கான சான்றிதழ் இல்லாத காரணத்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. மேலும் படத்தின் ரிலீஸ் ஆவதற்கான வழக்கு, ரிவைசிங் கமிட்டி என நாட்கள் கடந்து கொண்டே இருந்ததால் படம் இதுவரை வெளியாகவில்லை.

விஜய் தரப்பில் இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. காரணம் இந்த படம் ரிலீஸ் ஆனால், தமிழ்நாடு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்து விடுவார்கள் என்று விஜய் ரசிகர்கள் தொடங்கி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பல பொறுப்பாளர்களும் கூறி வந்தனர், அதனால் தான் மத்திய அரசும் மாநில அரசும் திட்டமிட்டு இந்த படத்தை முடக்குகிறார்கள், ரிலீஸ் செய்ய சான்றிதழ் தர மறுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தினர். இப்படி இருக்கையில் படம் ரிலீஸ் ஆகாததால் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டை பலரும் நம்பினர்.
கூட்டுச் சதி?: அதாவது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என்று மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவும் திரை மறைவில் சதி செய்கிறார்கள் என்று நேரடியாக குற்றம் சுமத்தினர். இப்படி இருக்கையில் ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது. சட்டவிரோதமாக லீக் ஆனது தொடர்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களிடம் கேள்வி எழுப்பினால் அவர்கள் தரப்பில் இருந்து பெரும்பாலும் வரும் பதில், 'இதற்கு காரணம் பாஜக மற்றும் திமுக என்பது தான். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா ஜனநாயகன் லீக் ஆனதற்கு காரணம் பாஜக அமைச்சர் எல்.முருகன் மற்றும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று குற்றம் சுமத்தி இருந்தார்.

ஏற்புடையதாக இல்லை: ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனம் பொதுமக்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது ஜனநாயகன் படத்தை ரிலீஸ் ஆக கூடாது குறிப்பாக தேர்தலுக்கு முன்னதாக ரிலீஸ் ஆக கூடாது என்று முடக்கியவர்கள் பாஜக மற்றும் திமுக என குற்றம் சுமத்திய அவர்களே தேர்தலுக்கு முன்பாக படம் லீக் ஆனதற்கும் காரணம் பாஜக மற்றும் திமுக என குற்றம் சுமத்துவது அடிப்படையில் ஏற்புடையதாக இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
பாஜக அமைச்சர்: இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியதற்கு பாஜக அமைச்சர் எல். முருகன் தான் காரணம். அவர்தான் அந்தத் துறையின் அமைச்சர். கொலை, கொள்ளை நடந்தால் எப்படி அந்தந்த துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறோமோ, அதே போல் இந்த துறைக்கான அமைச்சர் எல் முருகன் அப்படியானால் இந்த துறைக்கான அமைச்சரான எல். முருகன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











