சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழணும்.. தளபதி விஜய் வெளியிட்ட சூப்பரான வாழ்த்து!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சார்ந்தவர்கள், அரசியல் கட்சியினர், விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், ரஜினிகாந்த், அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதியானபோதும்கூட, ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன்: அதேபோல் நடிகர் கமல்ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!" எனப் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்: அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அதில் அவர், " எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்" என வாழ்த்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications











