Vijay: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்.. ஒரே பந்தில் அரசியல் சிக்ஸர் அடித்த விஜய்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் நலமுடன் உள்ளார் என தெளிவாக குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. பலரும் சூப்பர் ஸ்டார் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்தியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏன் விஜய் ரசிகர்களுக்கே இது ரொம்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகின்றது. ஏன் என்பது குறித்து கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலம்வரையில்,படத்தின் வெற்றி என்பது, திரையரங்கில் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகின்றது என்பதைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படத்தின் வெற்றி என்பது வசூலை மைய்யமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் சினிமாவில் யார் வசூல் மன்னன், யார் டாப் ஹீரோ என்ற பேச்சு எழுந்தது. இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் தளபதி விஜய்க்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் ஒரு படத்தை ரிலீஸ் செய்து வெற்றி கொடுத்துவிட்டால், அதைவிட அதிக வசூலைக் குவிக்க விஜய் தனது படத்தை ரிலீஸ் செய்வார் என்றும், விஜய் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், சூப்பர் ஸ்டார் தானும் ஒரு ஹிட் கொடுக்க திட்டமிடுவார் என்றும் பேச்சுகள் சினிமா உலகில் தொடர்ந்து உலா வந்து கொண்டு உள்ளது.

படத்தின் வசூலைக் கொண்டு வெற்றியை தீர்மானிப்பதால், ரஜினி மற்றும் விஜய்க்கு இடையில் கடும் போட்டி நடைபெற்று வருகின்றது எனலாம். இவர்கள் இருவரது சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே போகின்றது. அதேபோல் இவர்களின் படத்தின் வசூலும் கூடிக்கொண்டே போகின்றது. இப்படியான நிலையில், அதிக வசூலைக் குவிப்பது விஜய் படங்கள்தான், அப்படி இருக்கும்போது, விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு முதலில் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து தொடங்க, சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பெரும் வாக்கு வாதங்கள் பலமுறை நடைபெற்றுள்ளது.
பனிப்போர்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு குட்டிக் கதை, விஜய்யை குறிவைத்துச் சொல்லப்பட்டது என கூறப்பட்டது. மேலும், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற வரிகளான, 'பட்டத்தப் பறிக்க நூறு பேரு' என்ற வரிகளும் விஜய்யை குறிவைத்து எழுதப்பட்டதாக பேசப்பட்டது. இதற்கு, பதிலடியாக, லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதை கூறும்போது, காக்கா, கழுகு எனக் கூறிவிட்டு, மைக்கைவிட்டு நகர்ந்து சென்று சிரித்தார். அப்போது அரங்கமே சிரித்தது. மேலும் விஜய், ரஜினிகாந்த்திற்கு பதிலடி கொடுத்துவிட்டார் எனவும் விஜய் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். விஜய்யின் இந்த நடவடிக்கை, அவருக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையிலான பனிப்போரை உறுதி செய்யும் விதமாகவும் இருந்தது.

முடிவு கட்டிய ரஜினிகாந்த்: அதன் பின்னர் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த சலசலப்புக்கு முடிவு கட்டினார் ரஜினி. ஆனாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. விஜய் கட்சி தொடங்கியதற்கு ரஜினிகாந்த் நேரடியாக வாழ்த்து கூறவில்லை. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ' வாழ்த்துகள்' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். பிறந்த நாளுக்கு இருவருமே கடந்த சில ஆண்டுகளாக வாழ்த்து கூறிக்கொள்வது இல்லை. அண்மையில் நடந்து முடிந்த வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கத்தி படத்தின் சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டபோது கூட, விஜய் ரசிகர்கள், ரஜினியை வசை பாட ஆரம்பித்தனர்.

விஜய் பதிவு: விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், விஜய்க்கே தான் தான் சூப்பர் ஸ்டார் என்ற எண்ணம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், " மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் விஜய்யே ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் அனைவரையும் அரவணைத்துச் செல்வது என்பது மிகவும் முக்கியம் என நினைத்துதான் விஜய் இப்படியொரு பதிவை போட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











