12th Exam 2026: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை தனித் தேர்வர்கள் உட்பட மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவர்கள் எழுத உள்ளார்கள். இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். பல்வேறு தலைவர்களும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு வாழ்த்து: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! என தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











